இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா விசாவின் கீழ் அருகம்பே பகுதியில் நுழைந்து, அங்கு சுற்றுலாத் தொழிலுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக வியாபாரிகள் தெரிவிப்பு

**அருகம்பே சுற்றுலாத் தொழிலுக்கு இஸ்ரேலியர்களின் பாரிய தாக்கம்**
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா விசாவின் கீழ் அருகம்பே பகுதியில் நுழைந்து, அங்கு சுற்றுலாத் தொழிலுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறுகையில், சுற்றுலா விசாவின் கீழ் இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட பல வெளிநாட்டவர்கள் மீது ஏற்கெனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அருகம்பேயில் இஸ்ரேலியர்களின் தாக்கம் குறித்து சர்வதேச டிஜே கலைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டு, இலங்கையில் சுற்றுலாவிற்கு வந்த சர்வதேச டிஜே கலைஞரான டொம் மொனகலிடமிருந்து எழுந்துள்ளது.
அவர் கூறுகையில், அருகம்பேயில் பயணித்தபோது, இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவிற்கு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், இப்பகுதியில் இஸ்ரேலியர்கள் தங்கள் ஆதிக்கத்தை பரவலாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அருகம்பே, இலங்கையின் சுற்றுலாத் தொழிலில் முக்கியமான இடமாக விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், சர்ஃபிங் விளையாட்டுக்கு இப்பகுதியின் கடற்கரை மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகும்.
இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேலியர்களாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம், சுற்றுலாச் சேவைகளை வழங்குவதில் இஸ்ரேலியர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகும்.
இது தொடர்பாக
இலங்கையின் தெரன செய்தி நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், சுற்றுலா விசாவின் கீழ் வரும் இஸ்ரேலியர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால், உள்ளூர் வியாபாரிகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

