கல்முனை உப பிரதேச செயலக விடயமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் !

நூருல் ஹுதா உமர்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கும் தற்போதைய பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச் அபேயரத்ன அவர்களுக்கும் இடையில் இன்று (04) அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை உப பிரதேச செயலக விடயங்களை தெளிவுபடுத்தியதுடன், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள், இடைக்கால தீர்ப்புக்கள், குறித்த செயலகத்தின் சட்ட பிரச்சினைகள், கடந்தகால முன்னெடுப்புக்கள் பற்றி தெளிவுபடுத்தி இருந்தார்.
இவற்றை கேட்டறிந்த அமைச்சர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், நீதிமன்ற கட்டளைகளுக்கும் இடையூறு வராத வகையில் தமது முன்னெடுப்புகளை எதிர்காலத்தில் செய்ய உள்ளதாகவும், இது தொடர்பில் தீர்வை பெற கலந்துரையாடல்கள் மேற்கொள்ளும்போது மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் உட்பட சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசியே தீர்வுகளை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளதாக சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மகஜரொன்றையும் அமைச்சருக்கு கையளித்துள்ளார். அந்த மகஜரில்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட, இவ்விடயத்துடன் நேரடியாகத் தொடர்புபட்ட CA/Writ/67/2023 எனும் வழக்கிலக்கத்தைக் கொண்ட ரிட் மனுவின் இடையீட்டு மனுதாரர்களில் ஒருவராக நானும் இருக்கிறேன். எமது நாடு சிக்கலான உணர்வுபூர்வமான பல சவால்களை முகம்கொடுத்திருந்த அசாதாரண காலகட்டத்தில் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி கல்முனை உப வடக்கு பிரதேச செயலக பிரிவு நிறுவப்பட்டது. இன்று வரை அதன் இருப்பிற்கான சட்ட அடிப்படை பெரிய விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட ரிட் மனுவில் (CA/Writ/67/2023) அப்போதைய உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர், குறித்த அமைச்சின் செயலாளர், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை பிரதேச செயலாளர் ஆகியோர் இவ் உப வடக்கு பிரதேச செயலகப் பிரிவானது ‘ஒரு உப பிரதேச செயலகமாகவே உள்ளது என்றும் அமைச்சரவைத் தீர்மானம் இல்லாததன் காரணமாக இதனை பிரதேச செயலக அந்தஸ்த்துக்கு
தரமுயர்த்தப்பட முடியாது’ எனவும் சத்தியக்கடதாசி சமர்ப்பித்து உறுதியாக வெளிப்படுத்தியுள்ளனர்.
நடைமுறை மற்றும் சட்ட அடிப்படை இல்லாததைக் காரணம் காட்டி இதனை தரமுயர்த்துவதற்கான எந்தவொரு நகர்வுக்கும் அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், இவ் உப பிரதேச செயலகப் பிரிவினை ஒரு முழுமையான பிரதேச செயலகமாக வெளிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாததனையும் அவர்கள் தமது சமர்ப்பிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். சமர்ப்பிப்புக்களை முறையாக பரீசிலித்த கௌரவ மேன்முறையீட்டு நீதிமன்றமானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியிட்ட இடைக்கால உத்தரவின் மூலம் இவ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரப்பட்ட இடைக்கால நிவாரணத்தை வழங்க மறுத்துவிட்டதுடன் இவ் உப பிரதேச செயலகத்தில் தனியான கணக்காளர் பிரிவை ஸ்தாபிப்பதற்கும். கணக்காளர் ஒருவரை நியமனம் செய்வதற்கும் மறுத்துவிட்டது. மேலும் மேற்கூறப்பட்ட நிலுவையிலுள்ள ரிட் மனுவைத் தவிர இப்பிரச்சினையுடன் தொடர்புடைய வேறு இரண்டு வழக்குகள் தற்போது மேன்முறையீட்டு நீதி மன்றத்தின் முன் விசாரணையில் உள்ளன.
இச்சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கும் வழக்கில் ஈடுபட்டுள்ள மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் இல்லாத நிலையில் விவாதங்களை நடாத்துவது அல்லது தீர்மானங்களை எடுப்பது நடைமுறை ரீதியாக முறையற்றதாக கருதப்படலாம். மேலும். சம்பந்தப்பட்ட அமைச்சு, அரச பொது ஸ்தாபனங்களுக்கு புதிய சட்டச் சிக்கல்களையும், சவால்களையும் உருவாக்கக் கூடும்.
எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது 2022 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ அறிக்கையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த முடியாது என்றும் இது உப பிரதேச செயலகமாகவே இயங்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுத்துள்ளது. அரசியலமைப்பு ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரச அமைப்பான இவ்வாணைக்குழுவின் இக்கருத்தானது அதிக கனதியுடையது என்பதோடு எந்தவொரு நிருவாக ரீதியான நடவடிக்கையைச் சிந்திப்பதற்கு முன்னர் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியதுமாகும்.
2012 ஆம் ஆண்டு அதிமேதகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவர்களின் பங்கேற்புடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இன அல்லது பிரிவினை அடிப்படையில் பிரதேச செயலகங்கள் நிறுவப்படக் கூடாது என்றும். அரசியலமைப்பு விதிகளின் படி இன ரீதியிலான நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாது எனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் நிலத்தொடர்பற்ற செயலகம் அமைக்க முடியாது என்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இந்த விடயத்தில் நியாயமான, சட்ட பூர்வமான மற்றும் நிரந்தரத் தீர்வைப் காண்பதற்கு உங்களது அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் நீதிமன்ற வழக்குகளுக்கு முரண்படாத வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிரந்தர தீர்வை எட்ட நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் 03 வழக்குகளின் மனுதாரர்களையும், 02 இடையீட்டு மனுதாரர்களையும் சேர்த்து பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

