News

அகில இலங்கை ஜம்யதுல் உலமா பற்றி  அவதூறான செய்திகளைப் பரப்பிய you-tube பிரபலத்தை நீதிமன்றில்  ஆஜராகுமாறு உத்தரவு.

சர்ச்சைக்குரிய YouTube பதிவுகளை முகநூலில் பதிவேற்றும் அப்துல் சத்தார் முகம்மது இஸ்மத் எனும் நபர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) மற்றும் அதன் நிறைவேற்றுக்குழு  உறுப்பினர்கள் பற்றி பொய்யானவையும் சமூகத்தில் குழப்பம் விளைவிக்கக்கூடிய அவதூறான செய்திகளை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக கூறப்பட்ட வழக்கில்,
சம்பந்தப்பட்டவர் இணையத் தளங்களில் இருந்து அவற்றை உடனடியாக அகற்றுமாறும், 2025 ஆகஸ்ட் 21 அன்று  நீதிமன்றில் முன்னிலை யாகும் படியும்  கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி கட்டளையிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் இல- 9 ஆன ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 24ன் கீழ் அகில இலங்கை ஜம்யதுல் உலமா தாக்கல் செய்த மனுவுக்கு இணங்க இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

“இந்த சட்ட ஏற்பாட்டின் படி தடுக்கப்பட வேண்டிய அல்லது தீங்கு விளைவிக்கும் கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதற்கான சான்றுகள் இருந்தால், பாதிக்கப்பட்ட தரப்பினர் தடுப்பு உத்தரவை கோரலாம்.”

அகில இலங்கை ஜம்யதுல் உலமா சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சிந்தக ரங்கொத்‌கே, தனது வாதத்தில் சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தி சமூகங்களுக்கிடையே விரோதம், வெறுப்பை ஏற்படுத்துதல் மற்றும் மத நிறுவனங்களை அவமதிக்கும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு ACJU நிர்வாக குழு தீர்மானம் எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இவ்வாறான செயல்களுக்கு சட்டத்தின் மூலம் தீர்வு தேடவேண்டும் என்றும் நீதித்துறையின் சட்ட வரையறையின் கீழேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2025 ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 2 வரையிலான காலப்பகுதியில் முகம்மது இஸ்மத் வெளியிட்ட பல வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவையும் அதன் நிறைவேற்று உறுப்பினர்களையும் மற்றும் சமூக/மத நடவடிக்கைகளையும் குறிவைத்து அவதூறு உண்டாக்குவதாகவும் மேலும் சமூக விரோதத்தைக் தூண்டும் வகையிலும் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும் இவர் ஒரு தேசிய பாதுகாப்பு தொடர்பான குற்றவழக்கில் சந்தேகநபராக இருப்பதுடன், அண்மையில் வெளியான அரச அதி விஷேட வர்த்தமானியில் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலிலும்  இடம்பெற்றுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, சமூக அமைதி மற்றும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு ஆபத்தாக அமைந்து உள்ளன என்று வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார். இவற்றிற்கு ஆதாரங்களான  சமூக ஊடக பதிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 24(2)ன் கீழ் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி சந்தேகநபர் உடனடியாக அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களிலிருந்து அகற்றுவதுடன்,
எதிர்வரும் 2025 ஆகஸ்ட் 21 வியாழக்கிழமையன்று  நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, நீதிமன்றம் வழங்கிய உத்தரவை  நிறைவேற்றியதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், மேலும் தன்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதை விளக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டப் பிரிவின் கீழ், இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுவது ஒரு குற்றமாகக் கருதப்படுவதுடன்
இது அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 2 மில்லியன் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கக்கூடியதான குற்றமாகும்.

இவ்வழக்கு, 2025 ஆகஸ்ட் 21 அன்று மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button