அடுத்து , அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி அங்கிருந்து ஜப்பான் சென்று வர திட்டம் !!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பர் மாதத்தில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க்கிற்குச் செல்லும் ஜனாதிபதி, அதன் பின்னர் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜனாதிபதி செப்டம்பர் 23 ஆம் தேதி அமெரிக்காவுக்குப் புறப்படுவார் என்றும், செப்டம்பர் 24 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார் என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
அப்போது, ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பிற கொள்கைகளை விளக்க உள்ளார். மேலும், பொதுச் சபை அமர்வுக்கு இணையாக ஜனாதிபதி பல உலகத் தலைவர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் ஹேரத் கூறினார்.
நியூயார்க்கிலிருந்து, ஜனாதிபதி செப்டம்பர் 27 அன்று ஜப்பானின் ஒசாகாவிற்குப் புறப்படுவார். அங்கு, 2025 எஸ்பூ எக்ஸ்போவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார். கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இலங்கையின் தனித்துவமான பங்களிப்புகளை வெளிப்படுத்தும் எக்ஸ்போவில் நடைபெறும் இலங்கை தின கொண்டாட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்பார்.
இந்த EXO நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 28 ஆம் தேதி ஜப்பானுக்கான அரசுப் பயணம் தொடங்கும்.
ஜனாதிபதி திசாநாயக்க செப்டம்பர் 29 ஆம் தேதி பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார், மேலும் 30 ஆம் தேதி ஜப்பானிய பேரரசர் நருஹிட்டோவை சந்திக்க உள்ளார்.
ஜப்பானில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து டோக்கியோவில் நடைபெறும் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தும் என்று அமைச்சர் ஹேரத் மேலும் தெரிவித்தார்.

