News

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அரசாங்க நிதி இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில்…

வடக்கு, கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அரசாங்க நிதி இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த நிதி நிறுத்தம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எம்.பி பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட கழகங்கள், நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஏனைய சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கணிசமான தொகையை ஒதுக்கியமைக்காக எம்.பி பதியுதீன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அந்த திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறும், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி அந்த ஒதுக்கீட்டை திரும்பப் பெறுமாறும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ. சஜித் பிரேமதாசவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் ஆதரவளிப்பதாக அறிவித்த பின் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டது சந்தேகத்திற்குரியது. ஆனாலும், ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் தலைவராகவும், கடந்த சில தசாப்தங்களாக உங்களது ஆட்சியின் கீழ் பணியாற்றி வருகிறேன்.

அந்த அனுபவத்தின் மூலம் நீங்கள், உன்னதமானவர் எப்போதும் உண்மையுள்ளவராகவும், விடாமுயற்சியுள்ளவராகவும், சிறந்த தார்மீக மற்றும் நெறிமுறைகளைக் கொண்டவர் என்பதை நான் குறிப்பிட்டுள்ளேன்.

அந்தவகையில், மேற்கூறிய காரணத்தினால், சில தனிநபர்கள் மற்றும் அதிகாரிகளால் நெறிமுறையற்ற வகையில், மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்குத் தெரியாமல், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என எம்.பி பதியுதீன் கூறினார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிடுமாறும், அந்த கடிதங்களை உடனடியாக ரத்து செய்து, திட்டங்களை துரிதமாக அமுல்படுத்துவதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குமாறும் எம்.பி பதியுதீன் வலியுறுத்தினார்.

தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என்பதால், உரிய நிதியை திருப்பிக் கொடுக்காவிட்டால், இதுபோன்ற நெறிமுறையற்ற செயல்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவில் முறையிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இடைநிறுத்தி ஜனாதிபதி செயலகம் கடிதம் வழங்கியதை அடுத்தே எம்.பி பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button