மின் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்சார சபை அனுமதி கோரியது !

இலங்கை மின்சார சபை (CEB) வரவிருக்கும் கட்டண திருத்தத்திற்கான தனது முன்மொழிவை கடந்த வாரம் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்ததாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி சண்டே மார்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.
PUCSL இன் மூத்த அதிகாரி ஒருவர் இந்த முன்மொழிவு பெறப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, CEB யினால் முன்மொழியப்பட்ட கட்டணங்களின் விவரங்களை விவரிக்க மறுத்துவிட்டயாக சண்டே மார்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், மின்சார சபை 6.8 சதவீத அதிகரிப்பைக் கோரியுள்ளதாகவும், ஆனால் அது இன்னும் PUCSL ஆல் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் CEB இன் மூத்த அதிகாரி ஒருவர் செய்தித்தாளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் CEB ரூ.5.31 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவான ரூ.18.47 பில்லியன் இழப்பிலிருந்து ஒரு பெரிய முன்னேற்றமாகும். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்சார கட்டணங்கள் திருத்தப்பட்டதன் காரணமாக இந்த லாபம் கிடைத்தது. இருப்பினும், இந்த லாபம் 2024 ஆம் ஆண்டின் அதே காலாண்டில் பதிவான ரூ.34.53 பில்லியனுடன் ஒப்பிடும்போது 85 சதவீதம் சரிவைக் காட்டுகிறது. ஜனவரி 2025 இல் செய்யப்பட்ட சுமார் 20 சதவீத கட்டணக் குறைப்பு முதல் காலாண்டில் இழப்புகளுக்கு பங்களித்தது.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் அடுத்த தவணைக்கான செலவு அடிப்படையிலான மின்சார விலையை மீண்டும் நிர்ணயிப்பதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரையின்படி இந்தக் கட்டணச் சரிசெய்தல் செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் CEB இழப்பை ஜூன்-டிசம்பர் 2025 கட்டணக் கணக்கீட்டில் சேர்க்க முடியாது என்று PUCSL கூறியுள்ளது. ஜனவரி-ஜூன் 2025 இல் ஏதேனும் பற்றாக்குறை அல்லது உபரி இருந்தால் அது ஜனவரி-ஜூன் 2026 இல் சரிசெய்யப்படும். 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.51,098 மில்லியன் உபரி முதல் காலாண்டில் இழப்பை ஈடுகட்ட போதுமானது என்பதால், எந்த நிதிப் பற்றாக்குறையையும் ஈடுகட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

