இந்த நாடு பொருளாதார, சமூக ரீதியாக விருத்தியடைந்திருந்த காலப்பகுதி என் தந்தை மகிந்த ராஜபக்ஷவின் யுகமாகும்… அவர் இடையில் விட்டுச் சென்ற இடத்திலிருந்து முன்னோக்கி கொண்டுச் செல்வதே எனது பிரதான பொறுப்பாகும் ; நாமல்
‘‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து சென்று ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்து தமது அரசியல் முகாமை காட்டிக்கொடுத்தமையானது மனக்கஷ்டத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் தொடர்பில் தமக்கு மனக்கசப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடைநடுவில் விட்டுச் சென்ற வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே தனது பிரதான பொறுப்பாகும்’’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக இறை ஆசியை பெற்றுக்கொள்வதற்காக நேற்று முன்தினம் (18) அளுத்கம, கந்தே விகாரைக்கு சென்றிருந்த நிலையில், அதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக் கையில்,
கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். யாராக இருந்தாலும் எந்த நேரத்திலும் கட்சியிலிருந்து வெளியேற முடியும். எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்ளவும் முடியும்.
இருந்தபோதும், எங்களின் முகாமை காட்டிக் கொடுத்தது தொடர்பில் இன்னும் எங்களுக்கு கவலை இருக்கிறது. இருந்தபோதும், மனக்கசப்பு எதுவும் இல்லை.
இந்த நாடு பொருளாதார, சமூக ரீதியாக விருத்தியடைந்திருந்த காலப்பகுதி என்றால் அது மஹிந்த ராஜபக்ஷவின் யுகமாகும். எனவே, மஹிந்த ராஜபக்ஷ இடையில் விட்டுச் சென்ற இடத்திலிருந்து முன்னோக்கி கொண்டுச் செல்வதே எனது பிரதான பொறுப்பாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.