பிரிட்டன் : யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதல்

பிரிட்டன் நாட்டின் மான்செஸ்டரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு தலத்தில் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் இரண்டு யூதர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சிரிய வம்சாவளியைச் சேர்ந்த 35 வயதான பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அல்-ஷாமி, ஹீடன் பார்க் ஹீப்ரு என்ற யூத வழிபாட்டு தலத்துக்கு வெளியே மக்களை கத்தியால் தாக்கினார். அதற்கு முன்பாக அவர் மக்கள் மீது தான் ஓட்டி வந்த காரை ஏற்றினார். சம்பவ இடத்திலேயே போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர்.
“பயங்கரவாத சம்பவம்” தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை தெரிவித்துள்ளது.
யூத நாட்காட்டியில் புனிதமான நாளான யோம் கிப்பூர் தினத்தில் நடந்த “பயங்கரவாத தாக்குதலை” பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் கண்டித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள யூத வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கெய்ர் தெரிவித்துள்ளார். லண்டன் மேயர் சர் சாதிக் கான் தலைநகரில் உள்ள யூத வழிபாட்டு தலங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
காயமடைந்த மூன்று பேரில் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டவர், இரண்டாவது நபர் வாகனம் ஏற்றப்பட்டதால் காயமடைந்தவர், மேலும் மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவருக்கு “அதிகாரிகள் தாக்குதல் நடத்தியவரை தடுத்து நிறுத்தும் வேளையில்” காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 30வயதுள்ள ஆண்கள் இருவரையும், 60 வயதுள்ள பெண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.bbc



