முஸ்லிம்கள் ஜனாதிபதி தேர்தலில் பங்கு கொண்டு அடைந்த இலாபமென்ன?
இலங்கை மக்கள் இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள உள்ளனர். சிலர் ரணில் என்கின்றனர், இன்னும் சிலர் சஜித் என்கின்றனர். அவர்களின் வெற்றிக்காக படாத பாடும் படுகின்றனர். நாம் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற வினாவை எழுப்பினால், யாரிடமும் எந்தவிதமான ஆக்கபூர்வாமான பதிலையும் காணக்கிடைக்கவில்லை. இதுவே எமது சமூகத்தின் இன்றைய நிலை.
எமது முஸ்லிம் சமூகம் 2010ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவையும், 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியையும், 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சஜிதையும் ஆதரித்திருந்தது. இதில் மைத்திரி மாத்திரம் வெற்றியீட்ட, ஏனைய இருவரும் தோல்வியை சந்தித்திருந்தனர்.
வெற்றி பெற்ற மைத்திரியும் எதனையும் செய்யவில்லை, தோல்வியடைந்த ஏனைய இருவரும் எதனையும் செய்யவில்லை. மாறாக, முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத அழுத்தங்கள் தான் மென் மேலும் அதிகரித்திருந்தன. அவ்வாறானால் நாம் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற வினாவில் ஒரு நியாயம் இருப்பதாக தோன்றவில்லையா?
கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் முஸ்லிம் சமூகம் யாரை ஆதரித்திருந்தாலும், இறுதியில் எமது முஸ்லிம் கட்சிகள் வென்ற அணியிடம் சென்று, அவர்களின் அமைச்சரவையில் பங்குகொண்டிருந்தன. இவர்கள் ஆட்சிகளின் பங்காளிகளாகி எமது முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரச்சினையையாவது இதுவரை தீர்த்துள்ளார்களா?
நாம் யாரை ஆதரித்தாலும் எந்த பிரச்சினைக்கும் தீர்வும் கிடைப்பதாக தெரியவில்லை. மேலும் பிரச்சினைகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இதுவே கடந்த கால வரலாறுகள் எமக்கு தரும் பாடம். இத் தேர்தலில் நாம் யாரை ஆதரித்தாலும் இதுவே நடைபெறப் போகிறது. எமது முஸ்லிம் சமூகம் இவ்வாறான ஆழமான விடயங்களை கருத்தில் கொண்டு, இத் தேர்தலில் செயற்படுமாறு பணிவாக கேட்டு கொள்கிறேன்.