ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எவ்வித துரோகங்களையும் நாம் செய்யவில்லை ; ரிஷாத் பதியுதீன்
சமூக உரிமைக்காக குரல்கொடுக்கும் எமது கட்சி, பிரதேச அரசியல் நலன்களில் குறுக்கிடுவதில்லை என அகில அலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில், சனிக்கிழமை நடந்த கட்சியின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“பெருந்தலைவர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த காலத்தில், இப்பிரதேசத்திலிருந்த பழம்பெரும் அரசியல் புள்ளிகளை மக்கள் புறந்தள்ளி அஷ்ரஃபை ஆதரித்தனர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எவ்வித துரோகங்களையும் நாம் செய்யவில்லை. ரவூப் ஹக்கீமால் எங்கள் மீது ஒழுக்காற்று விசாரணைகள் நடத்த நியமிக்கப்பட்ட வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் என்.எம்.ஷஹீட் ஆகியோர் எங்களது செயற்பாடுகளில் நியாயம் இருப்பதாக உணர்ந்தனர். இதனால்தான், எமது கட்சியில் இவர்கள் இணைந்தனர்.
சாய்ந்தமருதில் இவ்வாறான மாநாட்டை ஏற்பாடு செய்த ரிஸ்லி முஸ்தபாவுக்கு நன்றி கூறவேண்டும். தலைமைக்கு கட்டுப்படும் பக்குவத்தை அவரிடம் நான் கண்டேன். இந்த மாநாட்டை ஒத்திப்போடுமாறு கோரியபோது எதுவும் கூறாமல் “ஆம்” என்றார். பின்னர், தொலைபேசியில் தொடர்புகொண்டு மாநாட்டை நடத்தும்படி கேட்டபோதும் அதற்கும் “ஆம்” என்றார். இந்தப் பண்பு அரசியலில் அவரை உச்ச இடத்துக்கு உயர்த்தும் என்று நம்புகிறேன்.
நான் அமைச்சராக இருந்த காலத்தில், இவ்வூரைச் சேர்ந்த பலர் முக்கிய பொறுப்புக்களை வகித்திருந்தனர். இவ்வூரின் கடந்தகால கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு எதிராக எமது கட்சி செயற்பட்டதில்லை. உள்ளூராட்சி தேர்தலில், எந்தக் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தக்கூடாதென பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கோரினர். எமது கட்சி எவரையும் தேர்தலில் நிறுத்தவில்லை. பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட வேண்டாமென சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வேண்டிக்கொண்டனர். இதற்கும் செவிமடுத்தோம். ஊரினது அல்லது பிரதேசத்தினது தனிப்பட்ட அபிலாஷைகளுக்கு இடைஞ்சலாக எமது கட்சி செயற்படாது.
இவ்வாறுதான், பொத்துவில் பிரதேசத்துக்கு ஒரு எம்.பியை வென்றெடுப்பதற்காக, வேட்பாளர் ஒருவரை எமது கட்சி போட்டியிட வைத்தது. கட்சியின் மீது நம்பிக்கை வைத்தே மக்கள் அவருக்கு வாக்களித்தனர். இப்போது வாக்களித்த மக்களையும், ஊரையும் ஏமாற்றிவிட்டு அவர் கட்சிதாவிச் சென்றுள்ளார். தனிப்பட்ட ஒருவரைப்பற்றி குறைகூறுவதற்கு நான் விரும்பவில்லை. மிகவும் வறுமையான குடும்பத்திலிருந்து வந்த அவரை எமது கட்சி எம்.பியாக்கியது. ஆனால், நன்றி மறந்து, சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை அலட்சியம் செய்து ஆளும் தரப்புக்குச் சென்றார் முஷார்ரஃப். சென்றது மட்டுமல்ல, எல்லாவற்றையும் மறந்து எங்களை இழித்தும் பளித்தும் விமர்சிக்கிறார். காங்கிரஸ் கட்சிகள் தேவையில்லை என இப்போது வாய்கூசாமல் கூறுகிறார். இளைஞர்களை தவறான வழியில் செல்லாமல் காப்பாற்றியது இக்கட்சிகள்தான்.
ராஜபக்ஷக்களின் விஷத்தில் வளர்ந்த அமைச்சரவை இன்று ரணிலிடமே சரணடைந்துள்ளது. இதற்காகவே ரணிலை எதிர்க்கிறோம். ஜனாதிபதியுடன் தனிப்பட்ட கோபங்கள் எதுவும் எங்களுக்கில்லை. நானும், ஹக்கீமும் இல்லாத அமைச்சரவையில் இருப்பதால், மகிழ்ச்சியடைவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சொல்கிறார். உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் உள்ள அமைச்சரவையே அலி சப்ரிக்கு சந்தோதஷமளிக்கிறதா? ஜனாஸாக்களை எரித்தபோது வாயே திறக்காத அமைச்சர் அலி சப்ரிக்கு, இஸ்லாமிய நம்பிக்கைகளுக்காக குரல்கொடுக்கும் எம்மைப் போன்றோர் வெறுப்புக்குரியவர்களாகியுள்ளோம்” என்றார்.
—
Media office of Hon. Rishad Bathiudeen.