“தொலைபேசியில் ‘ஹலோ” என்பதை தவிர முஷர்ரப் பேசிய அனைத்தும் பொய்களே – முஷர்ரப் பொத்துவிலின் ஒரு சாபக்கேடு ; ரிஷாத் பதியுதீன்
ஊடகப்பிரிவு-
பொத்துவில் மக்கள் தம்மோடு உள்ளதாகக் காட்டி, மேலும் பல கோட்டாக்களை ஜனாதிபதியிடமிருந்து பெற முயலும் ஏமாற்று அரசியல்வாதிக்கு, தகுந்த பாடம் புகட்டப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவை ஆதரித்து, பொத்துவிலில் (27) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
“மரியாதைக்கும் கண்ணியத்துக்குமுரியவர்களை அரசியல்வாதிகளாக்கிய பெருமை பொத்துவில் மண்ணுக்கு உள்ளது. மர்ஹூம் அஸீஸ், எஸ்.எஸ்.பி.மஜீத் உள்ளிட்ட பலர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்த வரலாற்றுப் பின்னணியிலேதான், எமது கட்சியும் பொத்துவிலிலிருந்து ஒருவரை எம்.பியாக்கியது. கட்சித் தலைமை மீதும் மண்ணின் மரியாதையிலும் நம்பிக்கை வைத்தே பொத்துவில் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
பெரும்பான்மைவாத மேலாதிக்க சிந்தனையில் செயற்பட்ட கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ஷ, மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி, சிறுபான்மைச் சமூகங்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றத்துடித்தார். கொரோனாவில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தீயிலிட்டு எரித்தார்.
“எங்களது மத நம்பிக்கைகளைப் பழிவாங்காதீர்கள்” என்றோம். இவரின் போக்கை எதிர்த்து சமூகக் குரல்களை கடுமையாக உயர்த்தினோம். சில காலங்கள் எங்களது இந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்த இந்த ஊர் எம்.பி. பின்னர், பேரினவாதிகளால் விலை பேசப்பட்டார். இதன் பின்னர், இவரது போக்குகள் பேடித்தனமாக மாறின.
அவுஸ்திரேலியா, கனடா, பிரிட்டனுக்கு அனுப்புவதாக கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, மக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்தவர் இவர். இதுபற்றிக் கேட்டால் கூச்சமின்றி பொய்யுரைப்பார். தொலைபேசியில், “ஹலோ” என்பதைத் தவிர, பேசிய அனைத்தும் பொய்களாகவே இருந்தன. இவரிடம் இனியும் ஏமாறாதீர்கள் என்பதற்காகவே இதைக்கூறி எச்சரிக்கிறேன்.
இஸ்லாத்தின் நம்பிக்கைகளை ஏளனம் செய்த, முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை புகழ்ந்து பேச ஆரம்பித்தார். பஷில் ராஜபக்ஷவை ஏழு மூளையாக புகழராம் சூடி, நிதியமைச்சராக இவரே வரவேண்டும் என்றெல்லாம் கூறியதற்குப் பின்னால், பல காரணங்கள் இருந்தன. அதிகார மோகத்தால், இவரது ஆத்மீக உணர்வுகள் பூச்சியமாகின.
ஆனால் நடந்தது என்ன? பஷில் ராஜபஷவால் ஒரு பட்ஜெட்டைக் கூட சமர்ப்பிக்க முடியாமல் போனது. மஹிந்தவும் மக்களால் நிராகரிக்கப்பட்டார். கொடுங்கோலனை மக்கள் விரட்டியடித்தனர்.
இந்த நிலையில்தான், ஆட்சியைப் பாரமெடுக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரினர். மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை பாரமெடுக்க முடியாதென சஜித் நிராகரித்தார். இவ்வாறுதான், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டபோது, 52 நாள் ஆட்சியிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடமிருந்து சஜிதுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆட்சி, அதிகாரத்துக்கு ஆசைப்படாத மற்றும் மக்கள் ஆணைக்கு விரோதமாகச் செயற்பட விரும்பாத சஜித் பிரேமதாச, இந்த அழைப்பையும் நிராகரித்தார். இதுவேவரலாறு.
நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நிபுணத்துவமுள்ளவர்கள் எம்முடன் உள்ளனர். ஹர்ஷ டி சில்வா, சுஜீவ சேனசிங்க, எரான் விக்கிரமரட்ன மற்றும் கபீர்ஹாஷிம் போன்றவர்கள் இதற்கு முன்னுதாரணம்” என்று கூறினார்.