News

மீண்டும் ஒரு கஷ்ட காலம் வந்தால் சஜித்தும் அனுரவும் ஓடிவிடுவார்கள் ; ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

“இயலும் ஸ்ரீலங்கா” என்ற அரசியல் மேடையே நாட்டைக் காப்பாற்றும் மேடையாகும் என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏனைய மேடையில் இருப்பவர்கள் மக்கள் இறந்தாலும், அரசியல் இலபாம் கிட்டினால் போதும் என்று நினைப்பவர்கள் என்றும் தெரிவித்தார்.

தான் சொல்வதில் ஏதாவது தவறு இருந்தால் பதில் சொல்லுமாறும் சவால் விடுத்தார்.

நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நேற்று (28) இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததோடு, ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”இதே இடத்தில் அரசியல் மேடையில் இதற்கு முன்னதாகவும் பேசியுள்ளேன். அப்போது இன்று என்னோடு இருக்கும் அமைச்சர்கள் இருந்த மேடையை விமர்ச்சித்துள்ளேன். அவர்ளும் என்னை விமர்ச்சித்துள்ளனர். இன்று நாங்கள் ஒரே மேடையில் இருக்கிறோம்.

அன்று இந்நாட்டு ரூபாவின் பெறுமதி 50 சதவீத்தினால் குறைந்துள்ளது. அதற்கு தீர்வு தேடுவதா இல்லாவிட்டால் பிரச்சினையை சாடிக்கொண்டிருப்பதா என்ற கேள்வி இருந்தது. நாட்டில் கேஸ், உணவு, மருந்து இல்லாத வேளையில் நாம் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதையே நாங்கள் சிந்தித்தோம். அதற்கு தீர்வுத் தேட என்னோடு வந்தவர்கள் இன்றும் எனது மேடையில் இருக்கின்றனர்.

எம்மை விமர்ச்சிபவர்கள் அன்று என்ன செய்தனர். அவர்களின் விமர்சனங்கள் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தந்ததா? மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நாட்டு மக்கள் வழங்கிய பொறுப்பை ஏற்க முடியாமல் ஓடினர். சஜித்துக்கும் அனுரவுக்கும் அன்று அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் அன்று மக்கள் இறந்தாலும் தமது அரசியல் இலாபமே முக்கியம் என்று நினைத்தவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லா விதமான மக்களும் சமூகமாக என்னோடு இணைந்துள்ளனர். எதிர்கட்சியினர் அன்று எதற்காக பொறுப்பை ஏற்க மறுத்தனர்? அன்று மக்களை பற்றி சிந்திக்காத தலைவர் இன்று அதிகாரத்தை கோருகிறார். நாட்டில் பிரச்சினை வந்தால் கட்டுநாயக்கவிற்கு ஓடி விமானத்தில் பறந்துவிடுவார். கஷ்ட காலத்தில் எந்த ஜனாதிபதி மக்களோடு இருப்பார் என்று சிந்தியுங்கள். அன்று இல்லாதவர்கள் இன்று வந்து புத்தகம் படித்து காட்டுவதில் அர்த்தமில்லை.

2022 இல் மொத்த தேசிய உற்பத்தி 15 சதவீதத்தினால் குறைந்தது. ரூபாவின் பெறுமதியும் குறைந்தது. அதனால் பொருட்களின் விலை அதிகரித்தது. வாழ்க்கை சவாலாக மாறியது.  இன்றும் பிரச்சினைகள் உள்ளன. ஒரு வருடத்தில் முடிந்த சலுகையை தந்திருக்கிறேன். நீங்கள் எனக்கு தந்த வாய்ப்பை பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி ரூபாவின் பெறுமதியை பலப்படுத்த வழி செய்தேன்.

இலங்கைகுள்ளேயே பணத்தை தேடினோம். விருப்பமின்றியேனும் மருந்து குடிப்பது போல கஷ்டமான தீர்மானங்களை எடுத்தோம். மக்கள் எம்மை திட்டித் தீர்த்தனர். ஆனால் நாம் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தோம். வரி சேகரிக்க ஆரம்பித்தோம் ரூபாயின் பெறுமதியும் வலுவடைந்தது அதன் பலனாக கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. பருப்பு விலை குறைந்துள்ளது. பஸ் கட்டணமும் குறைந்திருக்கிறது.

இவற்றை செய்யாவிட்டால் நாமும் கிரீஸின் நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம். ஆனால் கிரீஸை போல நெருகடி வந்த காலத்தில் நான் எந்தவொரு அரச ஊழியரையும் பணி நீக்கவில்லை. அவர்களையும் பாதுகாக்கவே வழி செய்தேன். இன்று கிரீஸ் பற்றி பேசுவோர் அன்று ஒலிம்பிக் ஆரம்பித்த கிரீஸூக்கே ஓடி மறைந்தனர். ஆனால் பேய்களை கண்டு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை. ஜே.ஆர் ஜயவர்தனவிடமே பாடத்தைக் கற்றேன். செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பளத்தை அதிகரித்தோம். அடுத்த வருடத்திலும் உதய செனவிரத்ன அறிக்கையின் பிரகாரம் சம்பள அதிகரிப்புச் செய்ய தீர்மானித்திருக்கிறோம். அதனால் வாழ்வாதாரச் செலவை அதிகரிப்போம். வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரி வரம்பை குறைத்திருக்கிறோம்.

மக்கள் வாழ்வாதாரத்துக்கான சலுகைகளை வழங்குவோம். இன்று நாட்டில் 5 விளைச்சல்கள் சாத்தியமாக செய்யப்பட்டுள்ளன. மேலும் பல தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியுள்ளது. புதிய தொழில்களையும் அதிக சம்பளம் ஈட்டும் தொழில்களையும் உருவாக்க வேண்டியுள்ளது. நிலையான பொருளாதாரமே எமது இலக்காகும். 24 மணித்தியாலங்களில் அவை அனைத்தையும் செய்ய முடியாது.

நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. யானைக்கோ கதிரைக்கோ கை சின்னத்துக்கோ மொட்டுக்கோ வாக்களிக்கவில்லை. உங்கள் சமையலறைக்கே வாக்களிக்க போகிறீர்கள். உங்கள் பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்காக சிலிண்டருக்கு வாக்களியுங்கள். டெலிபோனும், திசைக்காட்டியும் பழைய சின்னங்கள். சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் இல்லை என்று என்னை திட்டித்தீர்க்காதீர்கள்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button