எமது நாட்டின் அப்பாவி மக்களை பலி கொடுக்கும் இந்திய மருந்து கொழும்பு மேயர் பல்தசாரின் சகோதரியின் கணவனுடைய நிறுவனத்தின் ஊடாகவே இறக்குமதி செய்யப்பட்டது

(எம்.மனோசித்ரா)
இந்தியாவின் தரம் குறைவான மருந்து மாபியாவுக்கு எமது நாட்டின் அப்பாவி மக்களை பலி கொடுக்கும் கொடூரம் தற்போது அரங்கேறியுள்ளது. கொழும்பு மேயர் பல்தசாரின் சகோதரியின் கணவனுடைய நிறுவனத்தின் ஊடாகவே சர்ச்சைக்குரிய இந்திய மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. மக்களின் உயிரை துச்சமாக மதிக்காமல் இனியாவது இந்திய ‘பாமகோபியாவுடனான’ (மருந்துகளுக்கான தரங்களை நிர்ணயிக்கும் இந்தியாவின் உத்தியோகபூர்வ கட்டமைப்பு) இரகசிய ஒப்பந்தத்திலிருந்து விலகுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவின் தரம் குறைவான மருந்து மாபியாவுக்கு எமது நாட்டின் அப்பாவி மக்களை பலி கொடுக்கும் கொடூரம் தற்போது அரங்கேறியுள்ளது. முன்னர் எமது நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பிரித்தானிய தரத்தில் அல்லது அதற்கு உயர் தரத்தைக் கொண்டவையாகவே காணப்பட்டன.
கடந்த 76 ஆண்டு கால ஆட்சியில் இந்த தரம் ஒருபோதும் குறையவில்லை. ஆனால் 76 ஆண்டு கால சாபத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி. அரசாங்கம் இந்தியா பாமகோபியாவின் பிடிக்குள் சிக்கி மக்களை அதற்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறது.
உலகில் சுமார் 33 நாடுகளிலேயே இந்தியா பாமகோபியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்கா போன்ற வறுமை நிலையிலுள்ள நாடுகளைத் தவிர, அபிவிருத்தியடைந்த நாடுகள் இதனை அங்கீகரிக்கவில்லை. ஆனால் எமது அரசாங்கம் இதனை அங்கீகரித்து மக்களின் உயிர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதுவரையில் இரு யுவதிகள் உயிரிழந்துள்ளனர். ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் சில நோயாளர்களிடம் ஒவ்வாமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேயர் பல்தசாரின் சகோதரியின் கனவனுடைய நிறுவனத்தின் ஊடாகவே இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனம் மாத்திரமின்றி ஆளுந்தரப்பிலுள்ள மேலும் பல்வேறு முக்கிய புள்ளிகளுடன் தொடர்புடைய நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
இந்த தரம் குறைந்த மருந்துகளால் பதிவான யுவதிகளின் உயிரிழப்புக்களுக்கு யார் பொறுப்பு கூறுவது? அவர்களது குடும்பங்களுக்கு யாரால் நியாயத்தை வழங்க முடியும்? இது மனிதப்படுகொலையல்லவா? இதற்கு பொறுப்பு கூற யாரும் இல்லையா? இந்திய பாமகோபியாவுக்குள் சிக்கி அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதற்கான அனுமதியை நாட்டு மக்கள் அநுரகுமார திசநாயக்கவுக்கோ அல்லது நளிந்த ஜயதிஸ்ஸவுக்கோ வழங்கவில்லை. இந்தியாவுடன் இரகசியமாக செய்து கொள்ளப்பட்ட 7 பிரதான ஒப்பந்தங்களில் இந்தியன் பாமகோபியாவுடனான ஒப்பந்தமும் உள்ளடங்குகிறது.
இதற்கு முன்னர் எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறு தரம் குறைவான இலவச சுகாதார சேவையை வழங்கவில்லை. ஆனால் தற்போதிருப்பது தரக்குறைவான மருந்துகளை வழங்கி மக்களை கொல்லும் அரசாங்கமாகும். எனவே இனியாவது இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தேசத்திடம் மன்னிப்பு கோருங்கள் என்றார்.


