(பன்விலை) ஹுலுகங்கை பிரதேசத்தில் உள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றைக் கொள்ளையிடுவதற்காக வந்தவர்கள் முகமூடிகள், பிளாஸ்டிக் கைவிலங்குகள், சுத்தியல்கள், குறடுகள், விளையாடுத் துப்பாக்கிகளுடன் பொலிஸாரால் கைது

பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுகங்கை பிரதேசத்தில் உள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றைக் கொள்ளையிடுவதற்காக வந்து, அந்தப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள், கறுப்பு முகமூடிகள், பிளாஸ்டிக் கைவிலங்குகள், சுத்தியல்கள், குறடுகள், விளையாடுத் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்கள் என்பன பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் இரத்தினபுரி – ரக்வானை, டிக்கோயா மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாட்டின் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதும், இவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் மற்றும் பிடியாணை உத்தரவுகள் நிலுவையில் உள்ளதும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 45 மற்றும் 50 வயதுடையவர்கள் ஆவர்.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திரநாயக்க மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்க ஆகியோரின் மேற்பார்வையில், தெல்தெனிய பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சமரபால மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கிரிஷாந்தி லொகுகே ஆகியோரின் வழிகாட்டலில், பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. ரத்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



