பயிர்ச் செய்கை தேவைகளுக்காக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 25,000 ரூபா நேரடியாக வைப்பிலிடப்படும் ; ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து…
வாழ்க்கைச் சுமையைக் குறைத்தல், தொழில் வாய்ப்புகளை வழங்குதல், வரி நிவாரணம் வழங்குதல், பொருளாதார மேம்பாடு மற்றும் ‘உறுமய’ மற்றும் ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை செயல்படுத்தல், முதல் கட்டமாக, 100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தெரிவித்தார்.
பாடசாலைக் கல்வியை முடித்து வெளியேறும் 50,000 பிள்ளைகளுக்கு கைத்தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளது.
‘ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்’ ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, பொருளாதாரத்திற்கான திட்டம் மற்றும் ‘உறுமய’, ‘அஸ்வெசும’ வேலைத் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
‘மக்கள் பிரிவு’ என்ற புதிய எண்ணக்கருவை அறிமுகம் செய்து, அதை பொருளாதாரத்தின் வலுவான பகுதியாக மாற்ற, ஒவ்வொரு பிரஜைக்கும் காணி அல்லது வீட்டு உரிமை பெறும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
அத்துடன், ‘தேசிய செல்வ நிதியம்’ (National Wealth Fund)” ஸ்தாபித்தல் மற்றும் கூட்டுறவுத் துறை முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்றும் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்“ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிச் சபை ஆகியவற்றில் அங்கத்துவம் பெறுவதற்கு பலமான தொழிற்சங்கப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும், அந்த நிதியத்தை அரசாங்கப் பணிகளுக்குப் பயன்படுத்துவதை உச்ச அளவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெற் பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரம் அல்லது இதர தேவைகளைப் பூர்த்தி செய்ய நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 25,000 ரூபா நேரடியாக வைப்பிலிடப்படுவதோடு, போகத்திற்கு போகம் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என்று ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த, தற்போதுள்ள தடைகள் அனைத்தும் நீங்கப்படுவதோடு, முதலீட்டை ஊக்குவிக்க புதிய பொருளாதார ஆணைக்குழு, நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு, சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த சர்வதேச வர்த்தக அலுவலகம் அமைக்கப்படும்.
பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் 2040ஆம் ஆண்டு தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்றவாறு நவீனமயமாக்கப்படும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் அரசாங்கத்தால் வழங்கப்படும்.
யாழ் நதி திட்டத்தை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதாகவும், பூநகரியை வலுசக்தி கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதோடு, யாழ்ப்பாணத்தை தொழில்நுட்பக் கல்விக்கான மத்தியஸ்தானமாக மேம்படுத்துவதாகவும் ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.