(NPP எம். பியின் கஞ்சா தோட்டம்- பொலிஸ் அதிகாரி தாக்குதல்) செய்தியறிக்கையை உறுதிப்படுத்த எம்மிடம் தேவையான போதுமான ஆதாரங்கள் உள்ளன – காவல்துறை முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு ஹிரு ஊடக வலையமைப்பு பதில்

எம்பிலிபிட்டிய கஞ்சா தோட்டம் தொடர்பான செய்திக்கு காவல்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஹிரு ஊடக வலையமைப்பு நிராகரித்தது.
ஊடக சுதந்திரத்திற்கும், பொதுமக்களின் தகவல் அறியும் உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் காவல்துறை ஊடகப் பிரிவு அண்மையில் எடுத்துள்ள நடவடிக்கைகளை ஹிரு ஊடக வலையமைப்பு (Hiru Media Network) வன்மையாக நிராகரித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பிரிவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஹிரு தொலைக்காட்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாவது;
காவல்துறையின் இத்தகைய செயற்பாடுகள் ஜனநாயகக் கொள்கைகளைச் சீர்குலைப்பதாகவும், குறிப்பாக பொதுநலன் சார்ந்த விடயங்களை ஊடகவியலாளர்கள் அறிக்கையிடும் போது, பொதுமக்கள் உண்மைகளைத் தெரிந்துகொள்வதைத் தடுப்பதாகவும் அமைந்துள்ளது.
எம்பிலிபிட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா தோட்டச் சோதனையின் போது, காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹிரு தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறை அனுப்பிய கடிதத்திற்கே இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான முக்கிய சான்றுகளை காவல்துறையினரே பதிவு செய்திருந்த போதிலும், ஹிரு தொலைக்காட்சி அதனை வெளியிடும் வரை அந்தத் தகவல்களை நீதிமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்த காவல்துறை தவறிவிட்டதாக ஹிரு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
குற்றவியல் விசாரணை ஒன்றின் போது காவல்துறையினரால் பெறப்பட்ட இவ்வளவு முக்கியமான ஆதாரங்கள், ஏன் முன்னரே உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றும் ஹிரு தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சூர்யகந்த காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரின் முறைப்பாடுகள் மற்றும் வாக்குமூலங்களின்படி, அவர் மீதான தாக்குதலுக்கும் கஞ்சா தோட்டச் சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக ஹிரு தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் தரங்க ஜயகொடி கையெழுத்திட்ட அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், விசாரணைகளின் போது அத்தகைய தொடர்பு எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று காவல்துறை கூறி வருகிறது. ஆனால், தமது செய்தியறிக்கையை உறுதிப்படுத்தத் தேவையான போதுமான ஆதாரங்களும் மூலங்களும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஹிரு தொலைக்காட்சி, காவல்துறையின் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளது.
இதேவேளை, ஹிரு தொலைக்காட்சிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு (TRCSL) காவல்துறை அறிவித்துள்ளது.
ஒளிபரப்பு உரிமங்களை வழங்கும் அதிகாரசபை என்ற ரீதியில், விசாரணையின் முடிவுகள் குறித்து ஆணைக்குழுவிற்கு விளக்கமளித்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தமது செய்தி வெளியீடு பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை மதித்தே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள ஹிரு நிறுவனம், சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட உண்மையான ஆதாரங்களை வெளியிடுவதை, தவறான அல்லது பொறுப்பற்ற ஊடகவியல் எனக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் ஊடகங்களின் ஒரு பகுதிக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சில ஊடகங்கள் சரிபார்க்கப்படாத அல்லது தவறான செய்திகளை வெளியிடுவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டுகளை ஹிரு தொலைக்காட்சி தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.



