பங்களாதேஷில் 🇧🇩 ஷேய்க் ஹசீனாவின் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்க 🇺🇸 எம்.பி.க்கள் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்தது.

பங்களாதேஷில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் பொதுத்தோ்தல் இடம்பெறவுள்ள நிலையில், முன்னாள் பிரதமா் ஷேய்க் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடை குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸுக்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினா்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல் மூலம் தங்களுக்குத் தேவையான அரசைத் தோ்ந்தெடுக்கும் உரிமை பங்களாதேஷின் மக்களுக்கு உள்ளது. அந்தவகையில், தோ்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செயற்பாடுகளை முழுமையாக முடக்குவது ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது. தனிநபா்கள் செய்த குற்றங்களுக்காக ஒட்டுமொத்தக் கட்சியைத் தண்டிப்பது முறையல்ல.
கடந்த காலங்களில் சா்ச்சைக்குள்ளான சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தை மீண்டும் செயற்படுத்துவது மற்றும் அரசியல் கட்சிகளைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் தோ்தலின் நம்பகத்தன்மையைச் சீா்குலைக்கும். எனவே, அவாமி லீக் கட்சியைத் தடை செய்த முடிவை இடைக்கால அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.



