50 சதவீத பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை அரசாங்கம் எதிர்க்கட்சியிடம் வழங்க வேண்டும்.. இல்லாவிட்டால் இனிவரும் காலங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்படுவதைத் தடுக்க முடியாது ; SLPP பிரேமநாத் சி. தொலவத்த

உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்ட தோல்வி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த வெளியிட்ட கருத்து.
ஐம்பது சதவீத பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் வழங்கி செயற்பட்டிருந்தால், வரவு செலவுத் திட்டம் (Budget) தோற்கடிக்கப்பட்டிருக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பு மாநக சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களைத் தம்வசப்படுத்தி, இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், அந்த அதிகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாது என அவர் கூறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்:
“இன்று உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் ஒவ்வொன்றாகத் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மிக முக்கியமான இடமாக கொழும்பு மாநக சபை காணப்படுகிறது.
கொழும்பு மாநக சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். அன்று இரகசிய வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்ற போதிலும், இன்று அதற்கு ஏற்பட்டுள்ள நிலையை அனைவரும் காணக்கூடியதாக உள்ளது.
தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, அரசாங்கம் நாட்டின் அத்தியாவசியப் பிரச்சினைகளைக் கூட மறந்து விருந்துபசாரங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்தும் கூட வரவு செலவுத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய முடியாமல் போயுள்ளது. இப்போதாவது அரசாங்கம் உண்மையான நிலைமையைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். இனிவரும் காலங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்படுவதைத் தடுக்க முடியாது.”



