News

வாக்குறுதிகள், வதந்திகள், மற்றும் வன்முறைகள்: 2024 ஜனாதிபதி தேர்தலின் சவால்கள்

ஊடகவியலாளர் – ஏ.சி பௌசுல் அலிம்

2024 ஜனாதிபதி தேர்தல் சுவராசியமான கட்டத்தில் நுழைந்துள்ளது. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள், விஞ்ஞாபனங்கள், மற்றும் வன்முறைகளின் பின்னணியில் பரவிய வதந்திகள் தற்போதைய அரசியல் சூழலை மாறுபடுத்துகின்றன. இதன் விளைவாக, மக்கள், சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர்.

இவ்வேளையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டு, நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்த தேர்தலில், மக்களின் எதிர்பார்ப்புகள் மிகுந்துள்ள நிலையில், சில முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் குறிப்பிடத்தக்கவகையில் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க தனது “முடியும் ஸ்ரீலங்கா” என்ற விஞ்ஞாபனத்தில் பொருளாதார சீரமைப்பு, வேலை வாய்ப்புகள், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுக்கிறார். இவரது முக்கிய அம்சங்களில், நிதிசார் கட்டுப்பாடுகள், தொழில்நுட்ப பயிற்சிகள், மற்றும் பசுமை வளர்ச்சிக்கு உகந்த திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வின்ஞாபனம் நாட்டின் மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தனது “அனைவருக்கும் வெற்றி” என்ற விஞ்ஞாபனத்தில் சமூக நீதி மற்றும் சமநிலையற்ற வளர்ச்சியை முன்னெடுத்துக் கொண்டுள்ளார். ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு உதவும் திட்டங்கள், இலவச கல்வி, மற்றும் அனைவருக்கும் எளிதான மருத்துவ சேவைகளை வழங்குவதை அவர் வலியுறுத்துகிறார்.

திலித் ஜயவீர “ஒன்றுபடும் நாடு – மகிழ்ச்சி நிறைந்த நாடு” என்ற விஞ்ஞாபனத்தின் மூலம் ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளார். சமூகத்தில் உள்ள பாகுபாடுகளைக் கடந்து மகிழ்ச்சியையும் பொருளாதார சுதந்திரத்தையும் வழங்கும் முயற்சிகளை முன்வைத்துள்ளார்.

அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற விஞ்ஞாபனம், பொருளாதார முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் சமூக நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.

இந்த தேர்தலில், வன்முறைகள் மற்றும் வதந்திகளும் பரவியுள்ளன. பௌத்த விகாரைகளுக்கு எதிராக ஜே.வி.பி இளைஞர்கள் தாக்குதல் நடத்துவதை முயற்சிக்கின்றதாக புதிய வழி தேசிய இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது பொதுமக்களின் உணர்வுகளை தூண்டி, அரசியல் ஆதாயம் பெறுவதற்கான ஒரு நுட்பமாக இருக்கலாம். அதேவேளையில், சிவப்பு தம்பிகளும் இதில் பங்கு கொண்டிருக்கலாம் என விமல் வீரவங்ச கூறுகிறார். இது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் ஒரு விஷமாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், வதந்திகள் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வரும் முஸ்லிம் கட்சியும் அரசியல் குழப்பங்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. பொய்களை பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி, அரசியல் ஆதாயத்தை பெறுவதற்கான இச்செயல்கள் நாட்டின் நம்பிக்கைகளை குலைக்கக்கூடியவை.

இந்த தேர்தல், நாட்டின் அரசியல் நிலவரத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கும் சாத்தியங்களை கொண்டுள்ளது. வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை ஒட்டியவாறு அமைந்துள்ளதால், மக்கள் தங்களை பாதிக்கும் விடயங்களை நன்கு ஆய்ந்து, தகுந்த முடிவை எடுப்பார்கள் என்பதே நம்பிக்கை. நாட்டின் மக்கள் தங்கள் முடிவுகளை எடுக்கும் போது, அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளையும், கொள்கைகளையும் பரிசீலிப்பது முக்கியம்.

சமகால அரசியல் சூழலில், ஜனநாயகத்தின் அடிப்படையை குலைக்கக்கூடிய ஆபத்தை உருவாக்கும் வன்முறைகள் மற்றும் வதந்திகள், தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன. இந்த தேர்தல், நாடு முழுவதும் புதிய அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்பதே நம் எதிர்பார்ப்பு.

Recent Articles

Back to top button