சட்டவிரோதமாக குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. ஆனால் தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை. இதுதான் அரசின் கொள்கையா? ; சாணக்கியன்

மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. ஆனால், வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்க நிதி இல்லை. அதாவது, சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை. இதுதான் அரசின் கொள்கையா?” என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு, வவுணதீவு, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான், பன்சேனை, வாதக்கல்மடு, பாவற்கொடிசேனை, உன்னிச்சை மற்றும் நெடியமடு போன்ற பிரதேசங்களுக்கு இதுவரையில் குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. உன்னிச்சையில் இருந்து பல்வேறு பிரதேசங்களுக்கு குடிநீர் கொண்டுசெல்லப்பட்ட போதிலும், உன்னிச்சை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.
இந்த அரசாங்கம் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. ஆனால், இந்தப் பிரதேசத்துக்கு நீர் விநியோகத் திட்டத்தை வழங்கும் முன்மொழிவுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை.
ஆனால், மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசிகளுக்கு நீர் வழங்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோகத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
மணலாறு பிரதேசத்தில் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்ட வெலிஓயா குடியேற்றவாசி களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. ஆனால், வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்க நிதி இல்லை. அதாவது, சிங்களவர்களுக்கு நீர் வழங்க நிதி உள்ளது. தமிழர்களுக்கு நீர் வழங்க நிதி இல்லை. இதுதான் அரசின் கொள்கையா? இவ்வாறான நிலையில்தான் கிவுல்ஓயாத் திட்டத்தினூடாக சிங்களக் குடியேற்றங்களை முறையற்ற வகையில் உருவாக்குவதற்கும் முயற்சிக்கின்றீர்கள் என்றார்.



