News

அரசாங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக பழிவாங்கும் வகையில் செயற்படுவதாக சஜித் பிரேமதாச விசேட அறிக்கை மூலம் தெரிவிப்பு

அரசாங்கம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக பழிவாங்கும் வகையில் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  குற்றம் சுமத்தியுள்ளார். மதத் தலைவர்கள், விவசாயிகள், யுத்த வீரர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைக் இலக்கு வைத்து தொடர்ச்சியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் அவர் சாடியுள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிரேமதாச, அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து போஷிப்பதற்கும் ஏனைய அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்கும் அரசிற்கு கடப்பாடு இருந்தபோதிலும், அரசாங்கம் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக “விரோதமான மற்றும் அநீதியான” அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த அரசியலமைப்பு ரீதியான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அரசாங்கம் மத நிறுவனங்களை பலவீனப்படுத்தவும், நாட்டை மதமற்ற ஒரு கட்டமைப்பை நோக்கி நகர்த்தவும் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார். பௌத்த பிக்குகளுக்கு எதிரான இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும், அனைத்து மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை உறுதிப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.


விவசாயம் குறித்து கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அறுவடையை முடித்திருந்தாலும் விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்தவோ அல்லது பயிர் கொள்வனவுக்கான உரிய ஆதரவை வழங்கவோ அரசாங்கம் தவறியுள்ளதால் விவசாயிகள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் என்றார்.


மேலும், நெல் களஞ்சியசாலைகள் தற்போது பூட்டப்பட்டுள்ளதாகவும், நெல் கொள்வனவு எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்து பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னரும் உர மானியம் இன்னும் வழங்கப்படவில்லை என விவசாயிகள் தொடர்ந்தும் முறையிடுவதாகத் தெரிவித்தார்.


யுத்த வீரர்களை அரசாங்கம் “வெட்கக்கேடான மற்றும் அநீதியான” முறையில் நடத்துவதாகவும் பிரேமதாச குற்றம் சுமத்தினார். காலி பூஸா இராணுவ முகாமில் தங்கியிருந்த சுமார் 180 ஊனமுற்ற யுத்த வீரர்களை அங்கிருந்து வெளியேறி பெப்ரவரி 16ஆம் திகதியாகும் போது பனாகொடவிற்கு இடமாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இச்செயற்பாடு மிகவும் அநீதியானது என விவரித்தார்.
நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் வசதிகளையும் நலன்புரிச் சேவைகளையும் மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் அவர்களை வலுக்கட்டாயமாக தற்போதைய வசிப்பிடங்களில் இருந்து அகற்றுவது, ஊனமுற்ற படையினர் மீதான நன்றியுணர்வு மற்றும் பொறுப்புணர்வின்மையைப் பிரதிபலிக்கிறது என அவர் கூறினார். 


சீனாவினால் வழங்கப்பட்ட இலவச பாடசாலை சீருடைகளைக் கூட விநியோகிக்க அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளதாக விமர்சித்த அவர், இவ்வாறான நிர்வாகத் தோல்விகள் நேரடியாகப் பொதுமக்களைப் பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இயலாமையினால் விவசாயிகள், மதத் தலைவர்கள், யுத்த வீரர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்த பிரேமதாச, தமது தோல்விகளின் விளைவுகளை சாதாரண மக்கள் மீது சுமத்த வேண்டாம் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button