அமைச்சர் அநுர கருணாதிலக்க இராஜினாமா. !

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் முறையான சோதனையின்றி வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் இராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் அநுர கருணாதிலக்க இவ்வாறு குழுவிலிருந்து இராஜினாமா செய்துள்ளதுடன், அவருக்குப் பதிலாக புதிய உறுப்பினர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாநாயக்கக்கார தலைமையில் கடந்த 11ஆம் திகதி இந்த விசேட குழு மூன்றாவது முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது.
சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அன்றைய தினம் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்ததுடன், இதன்போது சம்பவம் தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கட்டாய பௌதீக சோதனைகளைத் தவிர்த்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைப்பதே இந்த விசேட குழுவின் பிரதான பொறுப்பாகும்.
சாட்சிய விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அமைச்சரின் இராஜினாமா குறித்து குழுவின் தலைவரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.



