News

நாம் வேறொரு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததை அடுத்து, நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் ஒரு மோசமான இனவாதி என்பதை நிரூபித்து விட்டார்.

மூன்றாம் வாசிப்புக்காக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த எனது மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான தனிநபர் பிரேரணையை தடுத்து நிறுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் ஒரு மோசமான இனவாதி என்பதை நிரூபித்துள்ளார். இது தமிழ் மக்களைப் பழிவாங்கும் செயற்பாடேயாகும்’’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.



அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்துக்காக ஜனாதிபதியினால் தமிழ் மக்கள் பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.



பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்தே இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர் தொடர்ந்து சபையில் உரையாற்றுகையில்,



மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூல தனிநபர் பிரேரணையொன்றை நான் முன்வைத்திருந்தேன். இந்தப் பிரேரணையின் இரண்டாம் வாசிப்பு விவாதம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. தனிநபர் பிரேரணை தொடர்பான நிலையியற் கட்டளைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் குழுவில் செப்டெம்பர் 3ஆம் திகதி மூன்றாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இணங்கியபோதும், அது இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை.



பாராளுமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. ஆனால் இதில் அரசியல் தலையீடு இருந்த காரணத்தினாலா இது தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று கேட்கின்றோம். இலங்கை தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதற்கு காரணமா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கவே இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இவ்வாறான நிலைமையில் நிலையியற் கட்டளையை மீறியும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் தீர்மானத்தை மீறியும் இதனைத் தாமதப்படுத்தியுள்ளனர்.



இது தமிழ் மக்கள் மீதான பழிவாங்கல் செயற்பாடாகும். ஜனாதிபதியுடன் நான் இந்த சட்டமூலம் தொடர்பில் கதைத்தபோது இதில் பிரச்சினையில்லை. மூன்றாம் வாசிப்புக்காக எடுக்கலாம் என்றும் இது தொடர்பில் சபை முதல்வருக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.



ஆனால், மூன்றாம் வாசிப்புக்காக நிகழ்ச்சி நிரலில் அது உள்ளடக்கப்படவில்லை. அவர் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியேற்றபோது ரணில் ராஜபக்ஷ என்றே அவரைக் கூறினர். ஆனால், அவரே அதனை நிரூபித்துள்ளார். அவருக்குள்ள அதிகாரத்துக்கமைய இந்தச் சட்டமூலத்தை தாமதப்படுத்தியுள்ளார். அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்பதுடன் அமைச்சரவையின் பிரதானியே. இதன்படி அவரால் இது தொடர்பில் அறிவிக்க முடியும்.

ஆனால், இறுதி நேரத்தில் ஏன் அவர் இவ்வாறு செய்ய வேண்டும்? இது தமிழ் மக்களை பழிவாங்கும் செயற்பாடே ஆகும்.



ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் முன்னாலும் நாட்டு மக்கள் முன்னாலும் இனவாதியாக காட்டப்படுவார். தமிழ் மக்களுக்கு தான் செய்வதாக வழங்கிய வாக்குறுதி எதனையும் அவர் செய்ததில்லை. அவர் இப்படியாக கடைசி நேரத்தில் தடுத்துள்ளார். நான் செய்ய இருந்த விடயம் என்றும் அதற்கு அனுமதி வழங்குவதாகவும் கூறிவிட்டு கடைசி நேரத்தில் எங்கள் மீது காட்டும் வெறுப்பாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.



நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பதற்கான வெளிப்பாடே இது. தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ராஜபக்ஷக்களுடன் கூட்டுச் சேர்ந்து மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை நாங்கள் பார்க்க வேண்டும்’’ என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button