யுத்தத்திற்குப் பின்னரான நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் சாதனைகளாகும் ; நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலைகாரர் அல்ல என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளமை ஒரு சாதகமான விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் அண்மைக்கால கூற்றுக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில், ”சரத் பொன்சேகா சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறக்கூடியவர் என்றாலும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பகிரங்கமாக ஊடக அறிக்கை விடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ தான்.
போர்க்கால சூழலில் இராணுவத்திடம் சரணடையுமாறு அழைப்பு விடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், யுத்தத்தின் போது வழங்கப்பட்ட உத்தரவுகள் குறித்து சரத் பொன்சேகா வெவ்வேறு காலங்களில் முரணான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை என்பது தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல, அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே ஆகும்.
பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
குறைந்தபட்ச உயிர் இழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களுடன் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கமாக இருந்தது.
சில அரசியல் குழுக்களாலும், புலம்பெயர் அமைப்புகளாலும் குற்றம் சாட்டப்பட்டது போல மஹிந்த ராஜபக்ஷ ஒரு “இரத்தவெறி பிடித்த கொலையாளி” அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியமைக்காக சரத் பொன்சேகாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அழிவை ஏற்படுத்திய ஒருவராக அல்லாமல், நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த ஒரு தலைவராகவே மஹிந்த ராஜபக்ஷ நினைவு கூரப்பட விரும்புகிறார்.
யுத்தத்திற்குப் பின்னரான நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் சாதனைகளாகும்.
குறைந்தபட்ச உயிர் இழப்புகளுடன் நாட்டுக்கு அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்வதே அவரது முதன்மை இலக்காக இருந்தது” என்று நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.



