மருதமுனை – உள்ளூர் வரலாறு அல்ல; கடல் வணிக நாகரீகத்தின் ஒரு பகுதி!
கொழும்பில் நடைபெற்ற 2ஆவது வரலாற்று ஆய்வரங்கில் புதிய வரலாற்றுத் தகவல்கள் வெளிச்சம்

🔴மருதமுனை – உள்ளூர் வரலாறு அல்ல; கடல் வணிக நாகரீகத்தின் ஒரு பகுதி!
கொழும்பில் நடைபெற்ற 2ஆவது வரலாற்று ஆய்வரங்கில் புதிய வரலாற்றுத் தகவல்கள் வெளிச்சம்!
🖋️எம்.ஏ.ஏ.ஏ.முஸ்அப்
கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் கடந்த வாரம் நடைபெற்ற 2ஆவது வரலாற்று ஆய்வரங்கில், மருதமுனையின் 19ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு முக்கியமான ஆய்வுக் கட்டுரை ஒன்று சிரேஷ்ட சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
“மருதமுனை: 19ஆம் நூற்றாண்டு வர்த்தகச் சங்கிலிகள், அரபுக் குடியேற்றம், ஆன்மிக வலைப்பின்னல்கள் மற்றும் வரலாற்றுப் பங்கு” என்ற தலைப்பில் வழங்கப்பட்ட இந்த ஆய்வு, இலங்கையின் தென்கிழக்குக் கரை வரலாற்றில் மருதமுனையின் தனித்துவத்தைக் கல்வியியல் ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்தது.
ஆய்வில் முன்வைக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
▪ மருதமுனையில் போத்துக்கேயர் ஆட்சி இல்லாத தனித்துவ வரலாறு – சுதந்திரமான கடல் வர்த்தக வளர்ச்சிக்கு வழிவகுத்தமை.
▪ கண்டி இராசதானியுடனான தாவள வர்த்தக இணைப்புகள்.
▪ மலே, அரபு, பாரசீக குடியேற்றங்களின் வர்த்தக மற்றும் சமூக பங்களிப்புகள்.
▪ ஆத்ம ஞானிகளின் வருகை, ஷாபி சட்ட மரபு மற்றும் தரீக்கா பரவல் – காதிரிய்யா, ஷாதுலிய்யா, பாஸியா மரபுகள்.
▪ மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்று வரும் நூற்றாண்டு கால புஹாரி மஜ்லிஸ் மரபு.
▪ மத்திய கிழக்கு, மலாக்கா பிராந்தியம், காயல்பட்டணம், கோழிக்கோடு ஆகிய பன்னாட்டு வர்த்தக வட்டாரங்களுடனான தொடர்புகள்.
▪ 19ஆம் நூற்றாண்டு வரை இயங்கிய சம்மாந்துறை நன்னீர் துறைமுகத்துடன் மருதமுனையின் வணிக இணைப்புகள்.
▪கல்முனையில் அமைந்திருந்த முஸ்லிம் நிலையம் குறித்த தொலமியின் வரைபட குறிப்புகள்.
கல்வெட்டுகள், அரபு நாணயங்கள் மற்றும் வாய்வழிச் சான்றுகள் மூலம் மருதமுனை பன்னாட்டு கடல் வர்த்தக வலையமைப்பில் இணைந்திருந்ததற்கான ஆதாரங்கள்.
இந்த ஆய்வு, M.I.M. Mohideen Research and Documentation Centre நடாத்திய 2ஆவது வரலாற்று ஆய்வரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கல்வியியல் ஆய்வுகளின் மூலம் மருதமுனை வரலாற்றை நிலைநிறுத்தும் முயற்சியாக இது பாராட்டப்பட்டது.
ஆய்வாளருக்கான நினைவுப்பரிசினை நிகழ்வின் பிரதம அதிதி கொழும்பு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் விரைவில் நூலாக வெளியிடப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



