புத்தளம், தில்லையடி அல்-காசிம் கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் ஜனாசா

புத்தளம், தில்லையடி அல்-காசிம் கிராமத்திற்கு அருகிலுள்ள வீதியொன்றில் இன்று (22) முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் ஜனாசா கண்டெடுக்கப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரணமடைந்தவர் புத்தளம், தில்லையடியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய அப்துல் லத்தீப் என புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
நேற்று இரவு (21) வீட்டில் இருந்த போது, யாரோ ஒருவர் அவரை வாடகைப்பயணம் (Hire) ஒன்றுக்கு அழைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் காலை வரை வீடு திரும்பாததையடுத்து, அவரது குடும்பத்தினர் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவரது ஜனாசா வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள அடப்பன வில்லுவ கிராமத்திற்குச் செல்லும் பாதையில் உள்ள கால்வாய் அருகே கண்டெடுக்கப்பட்டது.
காணாமல் போயுள்ள முச்சக்கரவண்டியை கொலையாளிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என நம்பப்பட்ட நிலையில் சற்றுமுன்னால் அந்த முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டது.
வீதியால் சென்றவர் சடலத்தைக் கண்டு பிரதேசவாசிகளுக்குத் தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



