முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான ஆளும் தேசிய மக்கள் சக்தி எப்படி வடக்கு மக்களின் மனதை வென்று அங்கு காலூன்றியது என பிரித்தானிய பிரதி பிரதமர் ஆர்வமாக கேட்டறிந்தார்

(நா.தனுஜா)
முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி வடக்கில் காலூன்றுவதற்கு வழிவகுத்த பின்னணிக் காரணங்கள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் நாட்டுக்கு வருகைதந்திருந்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் கலாநிதி அகிலன் கதிர்காமர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, சட்டத்தரணி கௌதமன், பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் நபீலா இக்பால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் அவற்றிலிருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள், சிறுபான்மையின மக்களின் உரிமைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாக முன்மொழியப்பட்டுள்ள புதிய வரைவு, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாமை, மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் காலதாமதம், புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் நிலவும் பின்னடைவு, முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களின்போது வடக்கில் காலூன்றுவதற்கு வழிகோலிய காரணிகள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதனை அவ்வப்போது கேள்விகள் எழுப்பி ஆர்வத்துடன் கேட்டறிந்த பிரதி பிரதமர் டேவிட் லமி, இம்மாற்றத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.



