News

MAS நிறுவனம் 26,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்: ஆடைத் கைத்தொழில் துறையில் பாரிய பின்னடைவு

இலங்கையின் ஆடைத் கைத்தொழில் துறையில் முன்னணியில் திகழும் MAS Holdings நிறுவனம், தனது பணியாளர்களின் எண்ணிக்கையை பாரியளவில் குறைக்க தீர்மானித்துள்ளது. தற்போது 96,000 ஊழியர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் அந்த எண்ணிக்கையை 70,000 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் நேரடி விளைவாக சுமார் 26,000 இலங்கை தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூடப்படும் தொழிற்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு

நிறுவன மறுசீரமைப்பின் கீழ் ஏற்கனவே சில உற்பத்திப் பிரிவுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:

• துல்கிரிய MAS பேப்ரிக் பார்க் (Fabric Park) வளாகத்தில் இயங்கிய ‘MAS Kreeda Methliya’ நிறுவனம் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது.

• எதிர்வரும் காலங்களில் ‘MAS KREEDA Vaanavil’ மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களில் அமைந்துள்ள ‘MAS Active’ தொழிற்சாலைகளின் செயற்பாடுகளும் நிறுத்தப்படவுள்ளன.

• ஹொரண மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இயங்கும் ‘MAS Bodyline’ நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையையும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஊழியர்களின் நிலைப்பாடு

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பள இழப்பீடு அல்லது வேறு பகுதிகளில் உள்ள கிளைகளில் வேலை வழங்குவதற்கு நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. எனினும், இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக, துல்கிரிய பகுதியில் பணியாற்றிய ஒருவருக்கு இரத்தினபுரி போன்ற தொலைதூரப் பகுதியில் வேலை வழங்குவது அவர்களை மேலும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் செயலாகும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்

Nike, Adidas, Victoria’s Secret மற்றும் Lululemon போன்ற சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக முத்திரைகளுக்காக (Brands) உற்பத்திகளை மேற்கொள்ளும் MAS நிறுவனம், அந்த சர்வதேச நிறுவனங்கள் மதிக்கின்ற ஊழியர் உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, நிறுவனத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக கூட்டாக குரல் எழுப்பும் வாய்ப்பு ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா நோக்கிய நகர்வு?

இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் பாரிய வரிச் சலுகைகளைப் பெற்று இலங்கையில் பெரும் லாபம் ஈட்டிய இந்நிறுவனம், தற்போது தனது செயற்பாடுகளை இந்தியாவுக்கு விரிவுபடுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது. குறைந்த கூலி மற்றும் குறைந்த மின்சாரக் கட்டணம் போன்ற சாதகமான காரணிகளைக் கருத்திற்கொண்டு, தனது தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு மாற்றும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் தந்திரோபாயத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். CN

Recent Articles

Back to top button