நிலையப் பொறுப்பதிகாரி திட்டியதால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்

அளுத்கம காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், நிலையப் பொறுப்பதிகாரி தன்னை திட்டியதாக தினசரி குறிப்பு புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு பணியை விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் உடல்நலக்குறைவு காரணமாக நோய் விடுப்பு பெற்று வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், மீண்டும் பணிக்குத் திரும்பிய போது விடுப்பு எடுத்தமை தொடர்பான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளார்.
அவர் சமர்ப்பித்த மருத்துவச் சான்றிதழில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நிலையப் பொறுப்பதிகாரி அவரை திட்டியதாகக் கூறி, குறித்த உத்தியோகத்தர் பணியை விட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்றும், கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் நிலையப் பொறுப்பதிகாரி தன்னைத் திட்டியதாகவும் அவர் தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பாக அளுத்கம காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, குறித்த உத்தியோகத்தர் உடல்நலக்குறைவு காரணமாக மூன்று நாட்கள் விடுப்பு பெற்று வீட்டிற்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
எனினும், விடுப்பு முடிவடைந்த பின்னர், தனக்கு கால் வீங்கி நோய் ஏற்பட்டுள்ளதால் பணிக்கு வர முடியாது என அவர் அறிவித்ததாக நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து 21 நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பிய உத்தியோகத்தரிடம் நோய் நிலைமை குறித்து வினவி, அதற்குரிய மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கோரியதாகவும், அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழில் சிக்கல் இருப்பதை அவதானித்த பின்னர் அது குறித்து அவரிடம் வினவியதாகவும் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அதன் பின்னரே குறித்த கான்ஸ்டபிள் தினசரி குறிப்பு புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு இவ்வாறு பணியை விட்டுச் சென்றுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.



