சுரேஷ் சலே போன்ற திறமையான புலனாய்வு அதிகாரிகளை கைது செய்வதால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் மன உறுதி சீர்குலையும் – இப்ராஹிம் போன்ற ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளுக்கே தண்டனை வழங்கப்பட வேண்டும் ; திலித் ஜெயவீரவின் சர்வஜன பலய ஊடகச் செயலாளர் ஹசன் அலால்தீன்

(க.சிவலிங்கமூர்த்தி)
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் இயலாமையையும் தோல்விகளையும் மறைப்பதற்காக முன்னெடுத்துள்ள ஒரு நாடகமாகும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் ஊடகச் செயலாளர் ஹசன் அலால்தீன் தெரிவித்துள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சி காரியாலயத்தில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்;
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நாள் முதல் அதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை கண்டறிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த அரசாங்கம் தனக்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே இவ்வாறான கைதுகளை முன்னெடுத்துள்ளதாக நாம் கருதுகிறோம்.
சுரேஷ் சலே என்பவர் யுத்தக் காலத்தில் வடக்கு கிழக்கில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய ஒரு அதிகாரி ஆவார். குறிப்பாக கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் தில்செல்லோ போன்ற முக்கிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் அவர் முன்னின்று செயற்பட்டவர். இவ்வாறான திறமையான புலனாய்வு அதிகாரிகளை இலக்கு வைத்து கைது செய்வதன் மூலம் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் மன உறுதியை சீர்குலைக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் என்பது இந்த நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான ஒரு பயங்கரவாதச் செயலாகும். இதனால் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளானது. எனவே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் மற்றும் அதற்கு உதவியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்சக்கட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
ஆனால் அதனை முறையான மற்றும் தொழில்சார் ரீதியான விசாரணைகள் மூலம் முன்னெடுக்க வேண்டுமே தவிர அரசியல் தேவைகளுக்காக அதிகாரிகளை பலிகடா ஆக்கக்கூடாது. கடந்த காலங்களில் மிலேனியம் சிற்றி காட்டிக் கொடுப்பு போன்ற சம்பவங்களால் துவான் முத்தலிப் மற்றும் சுரேஷ் ஹஸீன் போன்ற திறமையான புலனாய்வு அதிகாரிகளை நாம் இழந்தோம். இன்றும் அதே போன்றதொரு நிலைமையை உருவாக்கி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.
அரசாங்கம் பதவியேற்ற முதல் மாதம் முதலே சபாநாயகரின் பட்டப்படிப்பு விவகாரம் முதல் நிலக்கரி கொள்வனவு மோசடி வரை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்த நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காகவே தற்போது ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது. சுரேஷ் ஸலேக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் கூறுவார்களானால் எதற்காக அவரை மேலதிகமாக 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
ஆதாரங்கள் இருந்தால் நேரடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை வழங்க முடியும். எனவே ஒரு அதிகாரி மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரை குற்றவாளியாக சித்திரிக்கக் கூடாது. இப்ராஹிம் உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அனைவருக்கும் தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது இறுதி நிலைப்பாடாகும் என்றார்.



