அநுராதபுரம் கொட்டியாவெவ கிராமத்தின் விதியை மாற்றிய கல்வியாளர்: மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மௌலானா

🖋️இம்திஸா ஹஸன், BA (Hons) in Islamic Studies, BSc in Psychology
நாடறிந்த கல்விமான், சமூகத்தலைவர் மற்றும் சன்மார்க்கப் பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த அரிய ஆளுமை மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம்.பழில் மௌலானா, அவர் கல்லிப் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் மக்கள் மனங்களில் விதைத்த நம்பிக்கையும் விழிப்புணர்வும் தான் அவரின் உண்மையான பணியாக அமைந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அவர், அரசியல் பழிவாங்கலின் விளைவாக 1960ஆம் ஆண்டு கல்முனையிலிருந்து அநுராதபுரம் மாவட்டத்தின் அமைந்த கொட்டியாவெவ எனும் கிராமப்புற பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோதும், அதனை ஒரு தண்டனையாக கருதவில்லை மாற்றமாக அது ஒரு புதிய பணி நிலமாகவே அவர் கண்டார். அந்தச் சவால்மிகு சூழலில் அவர் மேற்கொண்ட கல்வி, மார்க்க மற்றும் சமூக மறுமலர்ச்சி முயற்சிகளை அவரது டயரிக் குறிப்புகள் உயிரோட்டத்துடன் பதிவு செய்துள்ளன. 25.02.2026 அன்று அவரின் மறைவிற்கு பதின்மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த இந்நாளில், கொட்டியாவெவ மண்ணில் அவர் விதைத்த மாற்றத்தின் விதைகள் எவ்வாறு மரமாக வளர்ந்தன என்பதை நினைவுகூர்வதே இந்நினைவுக் கட்டுரையின் நோக்கமாகும்.
புலிக்குளம் பெற்றது புதுப் பொலிவு
1960ஆம் ஆண்டு அநுராதபுரம் கொட்டியாவெவ முஸ்லிம் மஹா வித்தியாலய தலைமை ஆசிரியராக கடமையேற்றார். அங்கு இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளையும் நீங்கா நினைவுகளையும் தனது டயறிக் குறிப்புகளில் பின்வருமாறு பதிவு செய்கிறார்:
-… 16-3-1960 பஸ் பிரயாணம் மூலமாக நானும் மௌலவி முகையதீன் ஜமாலியும் அநுராதபுரம் பழைய நகரப் பள்ளிவாசலுக்கு சென்று அஸர் தொழுகை நிறைவேற்றினோம். அப்பள்ளியில் கடமை புரிந்து கொண்டிருந்த கதீப் முஹம்மது யூசுபு ஆலிம் உடைய உதவி பெற்று இருவரும் தத்தமது பாடசாலை நோக்கி அன்றே புகையிரதத்தின் மூலம் பிரயாணம் மேற்கொண்டோம். “பறசகஹவெவ மரங்கஹ” என்ற இடத்தில் இறங்கி வழித்துணை ஒருவருடன் மூன்றே முக்கால் மைல் கால்நடை நடந்து யானைக் காட்டினூடே கோழிபந்தாவை வந்து சேர நேரம் சரியாக மாலை 6 மணியாகியது. மண்குடிசை வைக்கோல் வீடு, உள்நுழைந்து செல்லக்கூடிய வழி அன்றிரவு அங்கு தங்கினேன்.
ஒரு மாதம் கோழி பந்தாவை முகையதீன் பிச்சை ஒற்றைக்கால மனிதனின் இடத்தில் தங்கி கொட்டியாவையில் கடமை புரிந்து வந்தேன். கொட்டியாவை ஒரு சிறு கிராமம் கானகத்தின் மத்தியிலே குளத்தின் பக்கதிலே அமைந்துள்ள பாடசாலை தகரக்கூரை. ஆசிரியர் தங்கவும் ஒரு கூடம். கானகத்தின் காட்சி யானை, புலி, கரடிகளின் உறுமல் மக்களின் கரடுமுரடான வாழ்க்கை இத்தனையும் என்னை ஆரம்பத்தில் அச்சத்துக்குள்ளாக்கின. எனினும், ஊர் மக்களின் பரிதாபகரமான வாழ்க்கை முறையையும் அவர்கள் எந்தவகையிலும் இஸ்லாமிய வட்டத்தினுள் இல்லையென்பதையும் அவதாளித்து வந்தேன்.
மாதங்கள் சில சென்றன. 28 மாணவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது. பிர்தௌஸி என்ற பெயருடைய யாழ்பாண ஆசிரியர் ஒருவரும் உதவிக்கு வந்தார். மாணவர்களுக்கு கலிமா, இஸ்லாம் கற்பிப்பதில் பெரும் நேரத்தை செலவளித்தேன். கிராம மக்களுடன் நன்கு பழகி அவர்களின் சன்மார்க்க நிலையையும் அறிந்து கொண்டேன். தகரக் கொட்டிலில் உறங்கி அங்கேயே ஐங்காலத் தொழுகையையும் நிறைவேற்றி வந்தேன். நல்ல உள்ளம் படைத்த அ.மு. காசிம் 40 ரூபா பேசி மூன்று வேளை உணவும் தேநீரும் தந்து கொண்டிருந்தார். மக்களும் என்னை அணுகி சுகம் விசாரித்து தங்களால் முடிந்த அளவு உபசரிப்பும் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்கும் சமமான சந்தர்ப்பங்களில் மார்க்க அனுஷ்டானங்களை பாடசாலை வளவில் குளக்கட்டில் குளக்கரையில் சொல்லிக் கொண்டே வந்தேன்.
மாணவர் தொகை எழுபத்தாறு, வகுப்புக்கள் 3ல் முடமாகிக் கிடந்தது. 7 வகுப்புக்களை எட்டிப் பிடித்து விட்டோம்; சிங்கள ஆசிரியரும் வந்துவிட்டார். பிர்தௌஸி இடமாற்றலாகிச் செல்ல நான் மட்டும் வகுப்புக்களை நடத்தி வந்தேன் மக்கள் மிகவும் நெருங்கிப் பழகி மரியாதை தர ஆரம்பித்து விட்டனர். ஒற்றையடிக் காட்டுப் பாதையை வெட்டி போக்குவரத்துக்கு ஏற்றதாக்கிய போதுதான் கிராமம் வெளிச்சம் அடைந்தது. மைத்ரிபால சேனாநாயகவை (பாராளுமன்ற உறுப்பினர்) பலமுறை கண்டு கதைத்தேன் பயனாக வெட்டப்பட்ட காட்டுப்பாதை புல்டோசரால் இரண்டு வாரங்கள் துப்பரவு செய்யப்பட்டது. உடைந்து, பாழடைந்து நீர் தேங்க முடியாத நிலையில் கிடந்த கொட்டியாவெவ புலிக்குளத்தை 65,000 ரூபா செலவில் திருத்தும் வேலையும் ஆரம்பமாகியது. இதே வேளையில் “சீ”கிறேட் தபால் கந்தோர் ஒன்று கொட்டியாவெவயில் “இகள கொட்டியாவெவ உப-தபால் கந்தோர்” என்ற பெயரில் ஒருவரின் வீட்டில் திறந்தும் வைக்கப்பட்டது.
மைத்திரியின் சேவையை மேலும் பெற்றதால் முதன் முதலாக அநுராதபுரத்திலிருந்து பஸ் சேவையும் ஆரம்பமாயிற்று. குறுகிய காலத்தில் கொட்டியாவையின் இந்த அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் பக்கத்து கிராமங்களை அதிர்ச்சியடைச் செய்தன. மௌலானா சேர் இப்போது எங்கட முதிசம் என்று குழந்தைகளும் பெரியவர்களும் கதைக்க ஆரம்பித்தனர். இவ்வளவு சேவைக்கும் எனக்கு உறுதுணையாக இருந்த அ. அஸனார் லெப்பையும் அ.மு. காசிம் என்பவரையும் ஆதம்பாவாவையும் நான் மட்டுமல்ல; மக்களே நீங்கள் மறக்கக் கூடாது. அஸனார் திடீரென மரணமாகியது எனக்கு பேரிழப்பாக இருந்தது. எனினும் சேவையைத் தொடர்ந்தேன்.
புகழ்பூத்த புளிய மரம்:
இத்தனை வேலைகளிடையே “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற எனது எண்ணத்தை குடிமக்கள் மனதில் படிப்படியாக வளர்த்து வந்தேன். முக்கியமாக இளைஞர்கள் உற்சாகம் காட்டினர். முதன் முறையாக புளிய மரம் ஒன்றின் கீழ் இறைவணக்கம் புரிய ஒரு மளை வேண்டும் என்பதை வலியுறுத்த கூட்டமொன்று கூட்டினேன், விளக்கினேன். “27 குடும்பம் எப்படி பள்ளி கட்டலாம்?” “பல்லாண்டு காலமாக முயற்சித்தும் முடியவே இல்லை” “எங்களால் இந்தப் பாரத்தை தூக்க முடியாது” “அடுத்த ஊர்ப் பள்ளி இருக்கிறது” “துவக்கினால் முடிக்க வேண்டுமே!” என்று பல குரல்கள் ஒலித்தன.
பல கூட்டங்கள் கூடிக் கலைந்தன. மர்ஹூம் அஸனார் லெப்பை என்ற நல்லடியானும் ஆதம்பாவா என்பாரும் என்னை சளைக்கவிடாது ஊக்கம் தந்து வந்தனர். ஒரு நாள் புளியமரத்தின் கீழ் திடீர் கூட்டம் எல்லோரும் வந்திருந்திருந்தனர். “ஐங்காலத் தொழுகையை பாடசாலையில் தொழுது வருகிறேன். பல ஜும்ஆக்களை இழந்துவிட்டேன். ஆகவே நான் மாற்றம் பெறப் போகிறேன்” என்று கூறவே ஒரே குரலில் கூடிய 20 பேரும் “வேண்டாம் வேண்டாம் கட்டுவோம் பள்ளியை” என்று சத்தமிடவே வசூலை ஆரம்பித்தேன். அன்றைய தினமே 1650 ரூபா சேர்ந்து விட்டது.
கருங்கல் உடைக்கப்பட்டது. செங்கல் சூளை வைக்கப்பட்டு திடும் திடும் என பள்ளி வேலை ஆரம்பமாகியது. சிரமதானம் மூலம் அதிகம் அதிகம் வேலை நடைபெற்றன. முட்டை, பிடி அரிசி. நெல், ஆடு, கோழி, காணிக்கைகள் பிரதி வெள்ளிதோறும் சேகரிக்கப்பட்டன. 1961ம் ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் கல்வைக்கபட்டது பள்ளிக்கு. கூரை மட்டம் முடியும் தறுவாயில் பேரதிர்ச்சி மக்களை அதிரச் செய்தது. அதுதான் புத்தளத்திற்கு கல்வியதிகாரியாக எனக்கு பதவி உயர்வு வந்தது. பதவி உயர்வு, இடமாற்றம். அங்கு சென்றும் பள்ளி கட்டும் பணியைத் தொடர்ந்தேன். மன்னார் வேப்பங்குளம் அஹமத் லெப்பையும் நிதி சேர்த்து தந்தார். இறைவனருளால் புகழ்பூத்த புளியமரத்தின் கீழ் ஆரம்பித்த பள்ளி வேலை 114,700 ரூபா செலவில் ஒரு அழகிய பள்ளிவாசலாக முற்றுப் பெற்றது.அல்ஹம்துலில்லாஹ். (எனது டயறிக் குறிப்புகள், பழில் மௌலானா, 1976)
1962 ஒக்டோபர் முதலாம் திகதி பழில் மௌலானாவின் வாழ்க்கைப் பாதையில் இன்னுமோர் ஏற்றப்படி, ஆம், அவர் புத்தளம்-சிலாபம் வட்டாரக் கல்வி அதிகாரியாக பதவியுயர்வு பெறுகிறார். போட்டி, பொறாமை, அரசியல் பழிவாங்கல்களுக்குப் பின்னரும் அவரது வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியவில்லை. அவரது உளத் தூய்மையான முயற்சிகளுக்கு அல்லாஹ்வின் துணை அவருக்குப் பக்கபலமாக இருந்தது என்று சொல்வதைத் தவிர வேறு காரணங்களை இதற்குக் கற்பிக்க முடியாது.
1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி வெள்ளிக் கிழமை இகள கொட்டியாவெவ முகையதீன் ஜும்ஆ மஸ்ஜித் வக்பு செய்யப்பட்டு முதல் குத்பாவை பழீல் மௌலானாவே நிகழ்த்த இறைவன் அருள் புரிந்தான். சபாநாயகர் எச்.எஸ். இஸ்மாயீல், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெய்னா மரைக்கார், எம்.எச்.எம். ஸாலிஹ் மரைக்கார், புத்தளம் காளிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மஹ்மூத் ஹஸரத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு புதிய பள்ளிவாசலைத் திறந்து வைத்தனர்.
கொட்டியாவெவ கிராமத்தினை பழில் மௌலானா மிகவும் நேசித்தார். அவ் ஆத்மார்த்தமான உறவு அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அவ்வூர் மக்களும் மௌலானாவுடன் தனிப்பட்ட முறையிலும் கிராமரீதியிலும் உறவுகளைப் பேணி வந்தனர். 1986இல் முஹைதீன் ஜூம்மா பள்ளியின் 21ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் பழீல் மௌலானா அவர்களின் இன்னுமொரு பெரு முயற்சியினால் அமைக்கப்பட்ட நூராணியா மத்ரஸா பழில் மௌலானாவின் மருமகனும் மருதமுனை லஜ்னத்துல் உலமாவின் அப்போதைய தலைவரும் மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலின் பேஷ் இமாமாகவும் பணியாற்றிய மெளலவி ஏ.எம். ஹஸன் (ஷர்க்கி) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அஷ்ஷெய்க் அஹமதுல் அன்ஸார் மௌலானா (நளீமி) ஜும்ஆ தொழுகையை நடத்தி வைத்தார். மருதமுனை வர்த்தகர்கள் அன்பளிப்பு செய்த அல்குர்ஆன் பிரதிகள், தொழுகை வழிகாட்டி நூல்கள் 75 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அத்துடன் மஸ்ஜிதுல் கபீர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலினால் அன்பளிப்பு செய்யப்பட்ட தொழுகை விரிப்புகள், அல்குர்ஆள் பிரதிகள், ‘அஸா’ (கோல்) என்பன பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்டன.
அநுராதபுரம் கொட்டியாவெவ கிராமத்தில் பழீல் மௌலானா ஆற்றிய சேவைகள் சாதாரணமாக மதிப்பிடப்பட முடியாதவை. ஒரு கிராமப் புரள்வையே அவர் அங்கு நடத்தியிருக்கிறார். கல்வி வசதி குறைந்த மார்க்கத்தைப் பின்பற்றுதலில் தொலைவில் நின்ற, கரடுமுரடான வாழ்வியல் அம்சங்களைக் கொண்ட மக்கள் மத்தியில் ஒரு கிராமத்தின் நிலைமாறுதலுக்கு அவசியமான பிரதான கூறுகளை பழில் மௌலானா அங்கு ஏற்படுத்தியிருக்கிறார் என்பது ஒரு சாமான்யமானவரால் முடியுமான சாதனை அல்ல. அவை ஒரு கிராமத்தில் விதியை மாற்றிய வரலாற்றுப் புரட்சி, அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத ஒரு பின்தங்கிய கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திலேயே அவர் நிகழ்த்திய மாற்றம் அசாதாரணமானது. மாணவர் எண்ணிக்கையை உயர்த்திய கல்விச் சீரமைப்பு, காட்டுப்பாதையை சாலையாக மாற்றிய முன்னெடுப்பு கொட்டியாவௌ குளத்தைப் புதுப்பித்த கிராம அபிவிருத்தி, தபால் நிலையம் மற்றும் பஸ்சேவையை கொண்டு வந்த நிர்வாகத் திறன், அதற்கு மேலாக புகழ்பூத்த புளியமரத்தின் கீழ் தொடங்கி அழகிய ஜூம்ஆ பள்ளிவாசலாக உயர்ந்த மார்க்கச் சின்னம் இவை அனைத்தும் அவரது தொலைநோக்கு பார்வை, திடநிலை மனம் மற்றும் சமூகத்தை இயக்கும் தலைமைத்திறன் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாகும்.
“எங்களால் முடியாது” என்று தயங்கிய மக்களிடையே “எம்மால் முடியும்” என்ற நம்பிக்கையை விதைத்து. அசாத்தியத்தைச் சாத்தியமாக்கிக் காட்டிய தீர்மானம் அவரது ஆளுமையின் உச்சத்தை எடுத்துக்காட்டுகிறது. அரசியல் சவால்கள் போட்டி, பொறாமை ஆகியவற்றைக் கடத்தும் அவர் உயர்ந்தது. அவரது உள்ளத் தூய்மையும் அர்ப்பணிப்பும் காரணமாகும் என்பதை காலமே சாட்சியாக நிற்கிறது.
இன்று கொட்டியாவெளின் வளர்ச்சியைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும், அந்த மாற்றத்தின் முதற்கல்லை வைத்த பழீல் மௌலானாவின் நினைவு நெஞ்சை நிரப்புகிறது. மனிதர் மறைந்தாலும், அவர் விதைத்த நற்காரியங்கள் காலத்தைக் கடந்தும் வாழ்கின்றன என்பதற்கு அவர் வாழ்க்கையே சான்றாகும். அவரது சேவைகளை நினைவுகூர்வது வரலாற்றைச் சொல்லுவதல்ல அது ஒரு தலைமுறைக்குப் பொறுப்பு, அர்ப்பணிப்பு. மற்றும் சமூக நேயத்தின் அர்த்தத்தை மீண்டும் உணர்த்துவதாகும். எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பணிகளைப் பொருந்திக்கொள்வானாக ஆமீன்.



