மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நீண்ட காலத்திற்கு நீடித்தால், இலங்கை கடுமையான நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நீண்ட காலத்திற்கு நீடித்தால், இலங்கை கடுமையான நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் இந்த நிலைமையை சரியாகக் கையாளத் தவறினால் நாட்டின் பொருளாதாரம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் என வலியுறுத்தினார்.
தற்போது நிலவும் எரிபொருள் வரிசைகள் மற்றும் மக்கள் பதற்றத்துடன் எரிபொருளை சேமிப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர் பின்வருமாறு கூறினார்:
“தரவுகளின்படி, இந்த தருணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அரசாங்கம் இந்த நிலைமையை சரியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் சிக்கல்கள் எழலாம். எனவே, பொறுப்புடன் செயல்படுமாறு நாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.”
அதேபோல், தற்போது மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் தரம் குறைந்த நிலக்கரி குறித்தும் அவர் தனது கவலையை வெளியிட்டார். இத்தகைய நிலக்கரி மூலம் தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது என்பதால், அரசாங்கம் மின்வெட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் அல்லது மேலதிக எரிபொருளை கொள்வனவு செய்ய நேரிடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
உலக எரிபொருள் விநியோகத்தில் 20 சதவீதத்தை ஈரான் கட்டுப்படுத்துவதால், போர்ச் சூழலுக்கு மத்தியில் எரிபொருளைக் கொள்வனவு செய்வது இலங்கை போன்ற நாடுகளுக்கு எதிர்காலத்தில் பெரும் சவாலாக அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



