News

ரியாத் மற்றும் குவைத் அமெரிக்கத் தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதல் !

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்துக்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, கட்டடத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்தன.

ரியாத்தில் உள்ள இந்த அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குவைத் நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ட்ரோன் (ஆளில்லா விமானங்கள்) தாக்குதல்

குவைத் நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ட்ரோன் (ஆளில்லா விமானங்கள்) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மூன்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திங்கள்கிழமை அதிகாலையில் தூதரகத்திலிருந்து புகை வெளியேறுவது காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத குவைத்தைச் சேர்ந்த ஒரு இராஜதந்திரி மற்றும் ஒரு மேற்கத்திய இராஜதந்திரி கூறுகையில், பல ட்ரோன் தாக்குதல்களால் தூதரகம் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தனர். மற்றொரு குவைத் இராஜதந்திரி, தூதரகக் கட்டிடம் நேரடியாகத் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் மூன்றாவது நாள் பதிலடித் தாக்குதலுக்கு மத்தியில், அமெரிக்கத் தூதரகத்திலிருந்து புகை எழுவதை ஏஎஃப்பி (AFP) செய்தியாளர் பார்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மக்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்று எச்சரித்துள்ள அமெரிக்கத் தூதரகம், “குவைத் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடரும் அபாயம் உள்ளது” என்றும் எச்சரித்துள்ளது.

Recent Articles

Back to top button