பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக விசேட வர்த்தமானி அறிவித்தல்

பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் கட்டளைப்படி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்தித குமானாயக்க அவர்களின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்:
• சக்தி மற்றும் எரிபொருள்: மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் எரிபொருள் விநியோகம்.
• சுகாதார சேவைகள்: வைத்தியசாலைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போஷாக்கு மற்றும் சிகிச்சை அளித்தல் தொடர்பான அனைத்து சேவைகள் அல்லது உழைப்பு.
• போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு: பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள், வீதிகள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட சுற்றுலா சேவைகளை வசதிப்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.
• நீர் மற்றும் கழிவகற்றல்: நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொடர்பான அனைத்து சேவைகள்.
• உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்: உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான அனைத்து சேவைகள்.
• நிர்வாகம் மற்றும் களப்பணி: அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ மையக் குழு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கள மட்ட உத்தியோகத்தர்களால் ஆற்றப்பட வேண்டிய அனைத்து சேவைகள்.
• அவசரகால மற்றும் வங்கிச் சேவைகள்: ஆம்புலன்ஸ் சேவைகள், இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள்.
• உள்ளூராட்சி சேவைகள்: தீயணைப்பு சேவைகள், கழிவு முகாமைத்துவம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து பொதுச் சேவைகள்.
• ஏனைய சேவைகள்: நீர்ப்பாசனம் தொடர்பான சேவைகள், தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடக சேவைகள், தாழ்நிலங்களை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பான அனைத்து சேவைகள்.

