எரிபொருள் வரிசையில் நின்றிருந்த நபர் ஒருவர் திடீரென விழுந்து உயிரிழப்பு

தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக குருநாகல் தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்தவர் வெல்லவ, முழுகஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய மத்தும கங்கானம்லாகே அசித ருவன் மத்துமகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி (01) மாலை, கோனகம பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்த போதே இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 1990 ‘சுவசரிய’ ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவர் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண பரிசோதனைகள் அந்த வைத்தியசாலையில் நடைபெறவுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் தலைமையகப் பொலிஸாரின் பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
