உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்து மக்கள் பணத்தை பகிரங்கமாக கொள்ளையடிக்கிறது ; எஸ்.எம். மரிக்கார்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்த போதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம் மக்களின் பணத்தை பகிரங்கமாக கொள்ளையடித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 26 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும் 30 நாட்களுக்குத் தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்றில் கூறியிருந்தார.
திடீரென டீசல் மற்றும் பெற்றோல் விலையை அதிகரித்தது அநீதியானது.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், தற்போதைய விலை அதிகரிப்பானது பழைய கையிருப்புகளை அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபம் ஈட்டும் ஒரு சூழ்ச்சியாகும்.
மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக இலங்கையின் தேயிலை, ஆடை உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை ஊடாகக் கிடைக்கும் டொலர் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் முறையான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்கவில்லை.
அவுஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தி முதலீடுகளை ஈர்க்க வேண்டியது அவசியம்.
வரி தடைகளை நீக்கி டொலர்களை நாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.



