அரசாங்கம் புதிய சட்டங்களை உருவாக்கி, பல்கலைக்கழக மாணவர்களை பாலர் பாடசாலை மாணவர்கள் போல் நடத்த முற்படுவதாக கூறி பேராதனையில் மாணவர்கள் தீப்பந்தப் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் இன்று இரவு கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் ஒரு ஒழுங்கையை பொலிஸார் மூடியுள்ளனர்.
இதனால் அந்த வீதியூடான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை பாலர் பாடசாலைகளாக கருதி சட்டங்களை உருவாக்கி, சுற்று நிருபங்களை வெளியிட்டு மாணவர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயல்வதாக கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் மாணவர்களின் எழுச்சியையும் ஒற்றுமையையும் தடுப்பதற்காகவே இவ்வாறான சுற்று நிருபங்கள் மூலம் மாணவர் அடக்குமுறை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்



