எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது… இலங்கைக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்தது

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விநியோகத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யனுடன் இன்று (13) வெளிவிவகார அமைச்சில் அவசர சந்திப்பொன்றை நடத்தினார்.
ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதில் முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விருப்பத்தேர்வை ஆராய இலங்கை முன்வந்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவதற்கான மேலதிக நடவடிக்கையாக ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.
இலங்கையின் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதாக ஒப்புக்கொண்ட தூதுவர் ஜகார்யன், தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உரிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாக உறுதியளித்தார்.
மேலும், இலங்கைக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் தொழிலாளர், நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருண மற்றும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



