எரிசக்தி நெருக்கடி குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை

உலகளாவிய ரீதியில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கத்தின் திட்டங்களை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கும், வதந்திகளைப் பரப்பி பொதுமக்களை வழிதவறச் செய்பவர்களுக்கும் எதிராக எவ்வித தயக்கமுமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன், விநியோக வலையமைப்புகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமையைக் கையாள்வதற்கும், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, சில தரப்பினர் சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான மற்றும் போலியான தகவல்களைப் பரப்பி வருவதை அரசாங்கம் அவதானித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்:
“யாராவது சீர்குலைக்கும் நோக்கில் தவறான தகவல்களைப் பரப்பி, நாட்டின் அமைதியான சூழலைச் சீர்குலைக்க முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்ட நாம் தயங்கமாட்டோம். அரசியல், வணிக அல்லது வேறு எந்த நோக்கத்திற்காக அமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கும் எதிராக பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”
தற்போதைய நிலைமையை 2022ஆம் ஆண்டு நிலவிய நெருக்கடியுடன் ஒப்பிடுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும், ஆனால் இது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகளாவிய நெருக்கடியாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2022ஆம் ஆண்டில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய டொலர் தட்டுப்பாடு நிலவியது. ஆனால், தற்போது நிலவும் சூழலானது மத்திய கிழக்கு போர் காரணமாக எரிபொருள் உற்பத்தி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகளினால் உருவானது என அவர் விளக்கமளித்தார்.
எனவே, எரிபொருள் நுகர்வைக் குறிப்பிட்ட மட்டத்திற்கு மட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள QR குறியீடு (QR Code) முறைமையைப் பின்பற்றுமாறும், தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேகரித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், அரசாங்கம் மற்றும் கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் என்பன உத்தியோகபூர்வமாக வெளியிடும் தகவல்களை மாத்திரம் நம்புமாறும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அரசாங்கம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.



