அடுத்த 3 மாத காலத்திற்கு அவசரமாக எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியைக் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்தது

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, அடுத்த 3 மாத காலத்திற்கு சாதாரண கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அப்பாற்பட்ட முறையில், அவசரமாக எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியைக் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தனது மசகு எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு மற்றும் நிலக்கரித் தேவைகளுக்காக முழுமையாக இறக்குமதியையே சார்ந்துள்ளது.
தற்போதைய சர்வதேச சூழலால் எரிசக்தி விநியோகத்தில் கப்பல் வருகைகள் ரத்து செய்யப்படுதல், காப்புறுதி நிறுவனங்கள் காப்புறுதி வழங்க மறுத்தல் அல்லது தாமதித்தல் போன்ற நேரடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில், தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நடைமுறையிலுள்ள வழமையான கொள்முதல் விதிகளுக்குப் புறம்பாக, அவசரத் தேவைகளைக் கருத்திற் கொண்டு எரிபொருள் மற்றும் நிலக்கரியைக் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



