News

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகாப்டர்கள் அன்பளிப்பு !!

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாகக் கிடைத்த 10 TH-57 Sea Ranger ஹெலிகாப்டர்கள் இலங்கைக்குப் புறப்பட்டன

அமெரிக்க அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ஹெலிகாப்டர்கள், 2026 மார்ச் 15 அன்று அமெரிக்காவின் அலபாமா மாநிலத்திலுள்ள மொபைல் துறைமுகத்திலிருந்து (Port Mobile, Alabama) இலங்கையை நோக்கிக் புறப்பட்டன. இவை 2026 மே 24 அன்று இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bell 206B-3 Jet Ranger ரக விமானத்தின் இராணுவப் பதிப்பான இந்த ஹெலிகாப்டர்கள், இலங்கை விமானப்படைக்கு (SLAF) ஒரு முக்கிய பலமாகும். Bell 206 ரக விமானங்களை இயக்குவதில் இலங்கை விமானப்படை கொண்டுள்ள அனுபவத்தைப் பயன்படுத்தி, மேம்பட்ட விமானி பயிற்சி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல்-மீட்புப் பணிகள் போன்ற அத்தியாவசிய பொதுப் பயன்பாட்டு நடவடிக்கைகளை இந்த ஹெலிகாப்டர்கள் கணிசமாக மேம்படுத்தும்.

இந்த நன்கொடையானது அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை உறுதிப்படுத்துவதுடன், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பையும் பலப்படுத்துகிறது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் இவை வருகை தருவதன் மூலம், இலங்கையின் விரைவான அவசரகால துலங்கல் மற்றும் உதவி விநியோகத் திறன் பெருமளவில் அதிகரிக்கும்.

இந்தக் கப்பலேற்றத்திற்கு முன்னதாக, குரூப் கப்டன் இரங்க குணசிங்க, குரூப் கப்டன் நாலக எட்டிபொல மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் சாமர திஸாநாயக்க உள்ளிட்ட இலங்கை விமானப்படை தூதுக்குழுவினர் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது ஹெலிகாப்டர்களின் ஆரம்பக்கட்ட ஆய்வுகள் மற்றும் கப்பலேற்ற ஏற்பாடுகள் குறித்து அவர்கள் கவனம் செலுத்தினர்.

இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் பெறுமதியான மற்றும் நிலையான ஆதரவிற்காகவும், இந்த முழுமையான நன்கொடைக்காகவும் அமெரிக்காவிற்கு இலங்கை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கைத் தூதரகம்

வாஷிங்டன் டி.சி.

17.03.2026

Recent Articles

Back to top button