65 லீற்றர் பெட்ரோலை வைத்திருந்த நபர் ஒருவருக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் இரண்டு மாத கால கடும் சிறைத்தண்டனை மற்றும் 2,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி 65 லீற்றர் பெட்ரோலை வைத்திருந்த நபர் ஒருவருக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் இரண்டு மாத கால கடும் சிறைத்தண்டனை மற்றும் 2,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி, குறித்த சந்தேக நபர் அனுமதியின்றி பெட்ரோலை சேமித்து வைத்திருந்தார்.
எரிபொருளை சேகரித்து வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, மார்ச் 18ஆம் திகதி இரவு வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளவத்தை பொலிஸாரால் பதுவித்த பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து நான்கு கேன்களில் அடைக்கப்பட்ட பெட்ரோல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், அதன் மொத்த மதிப்பு சுமார் 20,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் காலப்பகுதியில், அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைப்பது பாரதூரமான குற்றமாகும் என நீதவான் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, நீதிமன்றம் அபராதத்தையும் இரண்டு மாத கால கட்டாய சிறைத்தண்டனையையும் விதித்தது.



