அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள இராணுவ தளத்தின் மீது மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம்

அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் உள்ள இராணுவ தளத்தின் மீது மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பதற்றம் ஏற்றப்பட்டுள்ளது.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிக்கும் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் போர்ட் லெஸ்லி ஜே. மெக்நேயர் என்ற இராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த நிலையம் அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கிடங்குகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்த வளாகத்திலேயே வசிக்கின்றனர்.
இந்த சூழலில் கடந்த 10 நாட்களாக மெக்நேயர் இராணுவ தளத்தின் மேலாக மர்ம ட்ரோன்கள் பறக்கின்றன.
அமெரிக்க இராணுவத்தின் வான் பாதுகாப்பு கவசம், கண்காணிப்பை மீறி மர்ம ட்ரோன்கள் இராணுவ வளாகத்துக்குள் நுழைந்திருப்பது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
இதில் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மெக்நேயர் இராணுவ தள வளாகத்தில் இருந்து இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், டம்பாவில் மேக்டில் விமானப் படைத் தளம் செயல்படுகிறது.
இந்த விமானப் படைத் தளத்துக்கு அருகே மர்ம ட்ரோன்கள் அடிக்கடி பறப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே அமெரிக்காவில் உள்ள அனைத்து இராணுவ தளங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது



