எரிபொருள் வரிசைகளில் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்: சிவில் புத்தி பெரமுனவின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மஹவத்த தெரிவிப்பு

தற்போதைய எரிபொருள் வரிசைகளில் காத்திருக்கும் மக்கள், அரசாங்கத்தின் மீது வெறுப்பு கொள்ளாமல், நிலவும் உலகளாவிய சூழ்நிலை குறித்த சரியான புரிதலுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாக ‘சிவில் புத்தி பெரமுன’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மஹவத்த தெரிவித்துள்ளார்.
வரிசைகளில் இருக்கும் மக்கள் உலகப் பொருளாதார வீழ்ச்சி, உலகப் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி குறித்து நன்கு அறிந்து அங்கு காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் வருகை தாமதமாவதை மக்கள் அறிவார்கள் என்றும், அவர்கள் மிகவும் நிதானமாகவும் சில நேரங்களில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் வரிசைகளில் காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், பிரேசில், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இது கொரோனா பெருந்தொற்றைப் போன்று முழு உலகிற்கும் பொதுவான ஒரு பிரச்சினை என்றும், இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி அல்லது எரிசக்தி அமைச்சரை மாத்திரம் குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்றும் மஹவத்த அவர்கள் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டிவிடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், மக்கள் இப்போது அத்தகைய விஷயங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.
உலகமே பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து வரும் வேளையில், தற்போதைய அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



