இலங்கையில் மீண்டும் விலை அதிகரிக்கப்படுமா ?? உலகம் முழுவதும் எரிபொருள் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளதாகக் கூறி அரச ஊடகம் அவசர ஊடக பிரசாரம் (Media Campaign).

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கையிலும் எரிபொருள் விலைகளை மிக விரைவில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய உலகளாவிய போர்ச் சூழல்களே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதுள்ள விலை சூத்திரத்தின்படியும், தற்போதைய செலவினங்களைக் கருத்தில் கொள்ளும்போதும், நாட்டின் எரிபொருள் விலையை கணிசமான அளவில் அதிகரிக்க வேண்டியிருக்கும் என எரிசக்தி துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவர்களது கணக்கீடுகளின்படி, ஒரு லீட்டர் டீசல் விலையை சுமார் 200 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோல் விலையை சுமார் 100 ரூபாவினாலும் அதிகரிக்க வேண்டியுள்ளது.
இதேவேளை, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள விதம் குறித்து அரச ஊடக அலைவரிசைகள் மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவான சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் பரந்தளவில் பிரசாரம் செய்யப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.
நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் இரண்டு தனியார் நிறுவனங்களினால் கொண்டுவரப்பட்ட எரிபொருள் கப்பல்கள், விலை அதிகரிக்கப்படும் வரை விநியோகிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கனிப்பொருள் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.



