News

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய வன்முறையை கட்டவிழ்த்து கலவரம் ஏற்படுத்தி சொத்துக்களை அழித்த இஸ்ரேலிய குடியேறிகள் – இராணுவம் மற்றும் காவல்துறை அவர்களுக்கு உதவி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 

வீடுகள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், பல பாலஸ்தீனர்களைக் காயப்படுத்தியுள்ளனர்.

இது திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் என நேரில் கண்டவர்கள் விவரித்துள்ளனர்.


சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பல இடங்களில் இந்த வன்முறைகள் பதிவாகியுள்ளன. 

குடியேறிகள் ஜெனின் நகருக்கு தெற்கே உள்ள அல்-ஃபண்டகுமியா (al-Fandaqumiya) மற்றும் செய்லாத் அல்-தஹ்ர் (Seilat al-Dahr) ஆகிய நகரங்களுக்குள் நுழைந்ததாக பாலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வஃபா (Wafa) தெரிவித்துள்ளது.


அல்-ஃபண்டகுமியாவில் வீடுகள் மற்றும் கார்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், வீடுகளின் ஜன்னல்களும் அடித்து நொறுக்கப்பட்டன. செய்லாத் அல்-தஹ்ரில் குடியிருப்பாளர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். 

ஹெப்ரானுக்கு தெற்கே உள்ள மசாஃபர் யட்டா (Masafer Yatta) பகுதியில், இஸ்ரேலிய படைகளின் பாதுகாப்போடு குடியேறிகள் நுழைந்ததில் இரண்டு பாலஸ்தீனர்கள் காயமடைந்ததோடு மூவர் கைது செய்யப்பட்டனர்.

நப்லஸுக்கு தெற்கே உள்ள கர்யுட் (Qaryout) மற்றும் ஜலூத் (Jaloud) கிராமங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன.

ஜலூத்தில் சுமார் 100 முகமூடி அணிந்த குடியேறிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினர். 

இதில் தீயணைப்பு வண்டி உட்பட பல வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.
தாக்குதல்கள் நடந்தபோது இஸ்ரேலிய துருப்புக்களும் காவல்துறையினரும் கிராமங்களின் எல்லைகளில் இருந்தபோதிலும், அவர்கள் குடியேறிகளைத் தடுக்கவில்லை என்று சாட்சிகள் தி கார்டியன் (The Guardian) இதழிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள்   ஈத் அல்-பித்ர் (Eid al-Fitr) பண்டிகைக் காலத்தில் அரங்கேறியுள்ளன. 

2023 அக்டோபர் முதல் மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேறிகளால் 1,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய மனித உரிமைக் குழுவான பி’ட்செலெம் (B’Tselem), பாலஸ்தீன நிலங்களைக் கைப்பற்றும் உத்தியின் ஒரு பகுதியாக குடியேறிகளின் வன்முறையை அரசாங்கம் அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகக் கூறினாலும், எவரையும் கைது செய்ததாக அறிவிக்கவில்லை.

இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரான யாயர் கோலன் (Yair Golan) இந்த வன்முறையைக் கண்டித்துள்ளார். “நாம் ஈரான் மற்றும் வடக்கு எல்லையில் போரிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இந்த அரசாங்கம் அராஜகத்தை ஊக்குவிக்கிறது. போர்ச் சூழலைப் பயன்படுத்தி யூத பயங்கரவாதம் பரவுகிறது” என்று அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மேற்குக் கரையில் இஸ்ரேல் குறைந்தது 26 பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளது, அவர்களில் 18 பேர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button