ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை அமெரிக்கா ஈரானுடன் பகிர்ந்து கொள்ள போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை அமெரிக்கா ஈரானுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறினார்.
அதே வேளையில், போரில் இதுவரை பல ஆட்சி அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, ஆட்சி மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நானும், அயதுல்லாவும் – யாராக இருந்தாலும், அடுத்த அயதுல்லா யாரோ அவருடன் சேர்ந்து – ஒருவேளை (கட்டுப்பாட்டைப் பகிரலாம்). மேலும் அங்கு ஒரு வகையான ஆட்சி மாற்றம், மிகத் தீவிரமான ஆட்சி மாற்றம் ஏற்படும்.”
இரு தரப்பினருக்கும் இடையே “முக்கிய உடன்பாட்டு புள்ளிகள்” எட்டப்பட்ட இந்த உரையாடல்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதாகவும், இதில் ஈரானின் “உயர்மட்ட” தலைவர்கள் பங்கேற்றதாகவும் டிரம்ப் கூறினார். இருப்பினும், உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியிடமிருந்து அவர் எதையும் கேட்கவில்லை என்றும், கமேனி உயிருடன் இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாகர் காலிபாஃப் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக ‘தி ஜெருசலேம் போஸ்ட்’ இதழுக்கு ஒரு ஆதாரம் தெரிவித்தது.
“மிகவும் மதிக்கப்படுபவர் மற்றும் தலைவர் என்று நான் நம்பும் ஒரு நபருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று டிரம்ப் கூறினார்.
இந்த வாரம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மூத்த அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே ஒரு சந்திப்பை கூட்ட சமரச நாடுகள் முயன்று வருவதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
“நான் சொல்வதெல்லாம் இதுதான், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உண்மையான சாத்தியக்கூறுகளுக்கு மத்தியில் நாம் இருக்கிறோம்,” என்று புளோரிடாவிலிருந்து மெம்பிஸ் புறப்படுவதற்கு முன்பு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.



