இஸ்ரேலியப் பொதுமக்களையும், குழந்தைகளையும் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்துவதாகவும், அதனை கண்டிக்குமாறு கோரி யுனிசெப் இடம் இஸ்ரேல் முறைப்பாடு செய்தது

இஸ்ரேலியப் பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைக் குறிவைத்து ஈரான் நடத்தும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் (UNICEF) இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான துணைப் பணிப்பாளர் நாயகம் நினா பென்-அமி மார்ச் 23, 2026 தேதியிட்ட கடிதத்தில், இஸ்ரேல் முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கிளஸ்டர் குண்டுகள் தாக்கிய சமீபத்திய சம்பவங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
“இதுவரை, ஈரானிய ஏவுகணைகளால் 18 குழந்தைகளும் கைக்குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். 5 வயது சிறுமி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். 10 மற்றும் 12 வயதுடைய இருவர் படுகாயமடைந்தனர். 13, 15 மற்றும் 16 வயதுடைய உடன்பிறந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களின் கீழ் வாழும் இஸ்ரேலியக் குழந்தைகளின் உயிரிழப்புகள் மட்டுமன்றி, அவர்களின் உளவியல் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ள இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், ஈரானின் நடவடிக்கைகளை பகிரங்கமாகக் கண்டிக்குமாறும், மோதலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறும் யுனிசெப் அமைப்பை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் 2026 பிப்ரவரி 28 அன்று ஈரான் முழுவதும் உள்ள பல இடங்களின் மீது திடீர் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியபோது போர் வெடித்தது. இதில் ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி காமேனி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல், அமெரிக்கத் தளங்கள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகளின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.



