விபத்து தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 5,000 ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் சார்ஜன்ட் – இலஞ்சம் கொடுக்காமல் இலஞ்ச ஊழல் அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்து கைது செய்ய வைத்த அக்கரைப்பற்று நபர்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், 4,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் வியாழக்கிழமை (26) அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) கூற்றுப்படி, முறைப்பாட்டாளர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானமை தொடர்பில் 119 அவசர அழைப்பு ஊடாகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக குறித்த உத்தியோகத்தர் ஆரம்பத்தில் 5,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் முதலில் 1,000 ரூபாவை ஏற்றுக்கொண்டு முறைப்பாட்டாளரின் ஓட்டுநர் உரிமத்தைத் திரும்ப வழங்கியதாகவும், பின்னர் முறையான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதைத் தவிர்க்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தடுக்கவும் மீதமுள்ள 4,000 ரூபாவை கோரியதாகவும் கூறப்படுகிறது.
சந்தேகநபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



