போர் ஆரம்பித்து முதன் முறையாக இஸ்ரேல் மீது யேமன் ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது

ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி இன்று காலையில் ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடங்கியதிலிருந்து ஹவுதிகள் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.
ஏமனில் இருந்து ஹவுதி அமைப்பினரால் ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறிப்பதற்காக வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நெகேவில் உள்ள பீர்ஷேபா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வான் பாதுகாப்பு எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் நேரடித் தாக்கங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
ஈரான் மற்றும் பிராந்திய பகுதிகளில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்தால், நேரடி இராணுவத் தலையீட்டிற்குத் தயாராக இருப்பதாக ஏமன் ஹவுதி படைகள் நேற்று அறிவித்த நிலையில், இந்த முதல் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என ஈரானிய அரசு ஊடகமான ப்ரஸ் டிவி தெரிவித்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலம் மேற்கு ஆசியா முழுவதும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த இஸ்ரேல் முனைவதாக ஏமன் குற்றம்சாட்டியுள்ளது. இத்தகைய திட்டங்களையும், அவற்றுக்குப் பின்னால் இருப்பவர்களையும் எதிர்ப்பது பிராந்திய மக்களின் சட்டபூர்வமான உரிமை என்பதுதான் தங்களின் நிலைப்பாடு என ஏமன் தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகளுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்த ஹவுதி செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் யாஹ்யா சரீ, “இஸ்ரேலின் அநியாயமான, அடக்குமுறையான மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகள் உலக மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்பதோடு, உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன” என்றும் கூறினார்.



